பெங்களூரு,
கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் சகோதரரான எச்.டி. ரேவண்ணாவின் மகன் ஆவார். ஹாசன் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய தேர்தலின்போது ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் ஹாசன் நகர் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு ரேவண்ணா தப்பி சென்று விட்டார்.
அவருக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்தல் நடந்தபோது, வாக்காளர்களிடையே இவை பரவின. இவற்றில் பல வீடியோக்களை பிரஜ்வல், வீடு, அலுவலகம், குடோனில் வைத்து தன்னுடைய மொபைல் போனில் பதிவு செய்து, பின்னர் லேப்டாப்புக்கு மாற்றியுள்ளார் என கூறப்படுகிறது.
முதலில், இந்த வீடியோக்கள் எல்லாம் போலியாக சித்தரிக்கப்பட்டவை என கவுடாவின் குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க.வினர் கூறி வந்தனர். தேர்தலில் கவுடா குடும்பத்தினருக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முயற்சியிது என்றும் கூறப்பட்டது.
ஆனால் பின்னர், போலீசார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர் என கூறி குமாரசாமி சர்ச்சையில் இருந்து விலகி கொண்டார். கர்நாடக போலீசார் கூறும்போது, பென் டிரைவ் ஒன்றில் 2,976 வீடியோக்கள் இருந்தன என கூறினர்.
2019-ம் ஆண்டு எம்.பி.யான பின்னர் பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என தெரிய வந்துள்ளது. எனினும், அவற்றின் உண்மை தன்மை பற்றி அறிய, சில பென் டிரைவ்களை தடய அறிவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து பிரஜ்வல் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில், எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்குடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
அவர்கள் நவீன் கவுடா மற்றும் சேத்தன் கவுடா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி ஆஜரானபோது அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் இருவரும், பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ அடங்கிய பென் டிரைவ்களை வினியோகித்து உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பின்னர் பரப்பப்பட்டன.
ரேவண்ணாவின் இருப்பிடம் பற்றி இன்னும் தெளிவாக எதுவும் தெரியவில்லை. அவர், ஜெர்மனியில் இருக்க கூடும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர். குடும்பத்தினர், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் கர்நாடக மக்களிடம் பிரஜ்வல் மன்னிப்பு கேட்டு கொண்டார்.
சதி திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த விவகாரம் பற்றி ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆலோசித்து வருகின்றனர் என குற்றச்சாட்டு தெரிவித்த அவர், இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளானேன் என்றும் தனிமைப்படுத்தி கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
அரசியலில் வளர்ந்து வருகிறேன் என்பதற்காக தனக்கு எதிராக அரசியல் சதி திட்டம் தீட்டப்படுகிறது என கூறிய அவர், தனக்கு எதிரான வழக்கு எதுவும் இல்லாத சூழலில், வெளிநாட்டு பயணம் முன்பே திட்டமிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.