மும்பை கோரேகான் கிழக்கு பகுதியில் வாடகை வீட்டில் ஜெய்ராம் (39), திப்யா (29) தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் தங்கியிருந்த வீடு இருந்த பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக துர்நாற்றம் வீசியிருக்கிறது. முதலில் எலி இறந்திருக்கும் என்று நினைத்த அக்கம் பக்கத்தினர், துர்நாற்றம் அளவுக்கு அதிகமாக வந்தததையடுத்து, அப்பகுதியை சோதனை செய்தனர். அப்போது, ஜெய்ராம், திப்யா தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், சந்தேகத்தின் பேரில் வீட்டை திறந்தனர்.
பின்னர், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், திப்யா கொலைசெய்யப்பட்டு பிளாஸ்டிக் பையில் உடல் அடைக்கப்பட்டு, மின் விசிறி மற்றும் ஏர் கூலருக்கு கீழே வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஜெயராமும் காணவில்லை. அதைத் தொடர்ந்து போலீஸாருக்கு உடனடியாக இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். இதில், திப்யாவின் ஆதார் கார்டில் குறிப்பிட்டிருப்பதன்படி, அவர் ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். ஜெயராமும் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருவரும் மும்பையில் தொழிற்சாலையொன்றில் கூலிவேலை செய்து வந்தனர். கடந்த ஒரு வருடத்துக்கும் மேல் அந்த வீட்டில் வசித்தனர்.
இருவரும் தங்களை கணவன் மனைவி என்று கூறித்தான் அந்த வீட்டில் வாடகைக்கு வசித்தனர். ஆனால், தற்போது அவர்கள் உண்மையிலேயே கணவன் மனைவியா அல்லது இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தார்களா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் வசித்த வீட்டுக்கு கீழே ரப்பர் மோல்டிங் கம்பெனி ஒன்று இருக்கிறது. அதன் உரிமையாளர் சமீர் வீட்டில்தான் அவர்கள் வாடகைக்கு இருந்தனர்.
இது குறித்து சமீர் கூறுகையில், “கடந்த 22-ம் தேதிதான் ஜெய்ராம் வாடகை கொடுத்தார். அதன் பிறகு அவரை பார்க்கவில்லை. வழக்கமாக எனது கம்பெனி இரவு 9 மணி வரை இயங்கும். நான் பூட்டிவிட்டு சென்ற பிறகுதான் அவர்கள் இருவரும் வீட்டுக்கு வருவார்கள். கடந்த சில நாள்களாக வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம் பக்கத்தினர் துணையோடு கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே திப்யா கொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது” என்றார்.
மேலும், துணை போலீஸ் கமிஷனர் ஸ்மிதா பாட்டீல் கூறுகையில், பிரேத பரிசோதனையில் திப்யா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது என்றார். தலைமறைவாக இருக்கும் ஜெய்ராமை பிடிக்க போலீஸ் தனிப்படை ஒடிசாவுக்கு விரைந்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb