சென்னை: தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சென்னை – அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், தனது உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 25-ம் தேதி மதிமுக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தபோது, திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் வைகோவின் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.
தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சூழலில் தனது உடல்நிலை குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“அன்புள்ளம் கொண்ட தமிழ் பெருமக்களே. தமிழகத்தில் பொது வாழ்வில் ஈடுபடுகின்ற சாதாரண தொண்டன் ஆகிய இந்த வைகோ 7,000 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டுள்ளேன். ஆனால், கீழே விழுந்ததில்லை.
நான்கு நாட்களுக்கு முன்பு நெல்லையில் நான் தங்கியிருந்த வீட்டில் படி வழியாக செல்லாமல், திண்ணை மீது ஏறினேன். அப்போது இடது பக்கமாக கீழே விழுந்துவிட்டேன். தலை அல்லது முதுகு பகுதியில் அடிபட்டு இருந்தால் இயங்க முடியாமல் போயிருக்கும். இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மருத்துவர்களின் ஆலோசனையின் படி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு தோள்பட்டை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். நான் நன்றாக உள்ளேன். முழு ஆரோக்கியத்துடன் வருவேன். முன்பு போல இயங்க முடியுமா என யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். எனக்காக கவலை கொண்டுள்ளவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி சொந்தங்களே வணக்கம்.
இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் தனது உடல்நிலை குறித்து தமிழ் பெருமக்களுக்கு விளக்கியும், அவர் நலனை விழையும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டியும் காணொளியில்… pic.twitter.com/4FLFc9ifwB