‘கோலிசோடா’, ’10 எண்றதுக்குள்ள’ போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டன் தற்போது ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ், “மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.
‘கோலி சோடா’ படம் பார்த்திருக்கிறேன். விஜய் மில்டன்தான் இந்தப் படத்தை இயக்குகிறார் என்பதால் கதையைக் கேட்காமலேயே ஓகே சொல்லி விட்டேன். விஜய் ஆண்டனியுடன் நான் நடிக்கும் 3வது படம் இது. அவருடன் நடிக்கும்போது மிகவும் எளிதாக இருக்கும். சினிமாவானது புது புது விஷயங்களால் மாறிக்கொண்டே இருக்கிறது. நான் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் பயணப்படக் காரணம் சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறிக் கொள்வதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க என்னிடம் யாரும் கேட்கவில்லை. பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்றால் என் நண்பர் மணிவண்ணன் போன்ற ஒருவர் இயக்கினால் நன்றாக இருக்கும்.
இல்லையென்றால் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் மாதிரியான இயக்குநர்கள் மோடியின் பயோபிக் எடுத்தால் நன்றாக இருக்கும். அவர்கள்தான் இருப்பதை அப்படியே எடுப்பார்கள்” என சத்யராஜ் கூறியிருக்கிறார்.