விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல்: ம.பி.யில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு

போபால்: மத்திய பிரதேசம் ஜபல்பூரில் உள்ள 11 தனியார் பள்ளிகள் ரூ.100 கோடி வரை கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.

இந்த தனியார் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தீபக்சக்சேனா உத்தரவிட்டார். கட்டண விதிகளை மீறி வசூலித்த தொகையை பெற்றோரிடம் 30நாட்களுக்குள் திருப்பி செலுத்தும்படியும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கட்டளையிட்டார்.

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள், பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள் என 51 நபர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஜபல்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில் இந்த 11 தனியார் பள்ளிகள் மீது 11 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தீபக் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் பள்ளிகள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவேமுதல்முறையாகும். கல்விக்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி முறைகேடாக அதனை வசூலித்து இந்த பள்ளிகள் ரூ.100 கோடி வரை ஊழலில் ஈடுபட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இதுதொடர்பான விசாரணை தொடங்கியது. முதல் கட்டமாக சோதனைநடத்தப்பட்ட 11 தனியார் பள்ளிகளும் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்டத்தை மீறி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளிகள் கல்விக் கட்டணத்தை 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்க நினைத்தால் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம். அதுவே 15 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முயன்றால் மாநில அளவிலான கமிட்டியின் ஒப்புதல் அவசியம். ஆனால் இதுபோன்ற எத்தகைய விதிகளையும் சம்மந்தப்பட்ட பள்ளிகள் பின்பற்றவில்லை. ரூ.81.3 கோடி முறைகேடாக இந்த பள்ளிகள் வசூலித்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பாடநூல் முறைகேடு: இதுபோக போலி மற்றும் நகல் எடுக்கப்பட்ட ஐஎஸ்பிஎன் எண் கொண்ட நூல்கள் பள்ளிபாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் பெற்றோருக்கு கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தக சந்தையில் புதிய பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட நூல்கள் கிடைக்காத சூழல் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பள்ளிகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய கடைகளில் மட்டும் குறிப்பிட்ட நூல்கள் அதிகபட்சசில்லறை விலையைக் காட்டிலும் 2மடங்கு விலையில் விற்கப்பட் டுள்ளன. இத்தகைய புத்தக ஊழல் திட்டத்தின் மூலம் இந்த 11 பள்ளிகள் பெற்றோரிடமிருந்து ரூ.4 கோடி கூடுதலாக வசூலித்துள்ளன. இதுதவிர பள்ளி நிர்வாக கணக்கு வழக்கிலும் பொய் கணக்கு காட்டி நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.