இஸ்ரேலின் கொடூர செயலால் உலகின் ஒட்டுமொத்த பார்வையும் பாலஸ்தீனத்தின் ராஃபா மீது விழுந்திருக்கிறது. இதற்கு காரணம், கடந்த அக்டோபர் முதல் 8 மாதங்களாக பாலஸ்தீனத்தில் பொதுமக்களையும் பொருட்படுத்தாமல் போர் நடத்தி வரும் இஸ்ரேல், போர் காரணமாக பாதுகாப்பான இடமென்று ராஃபாவில் (Rafah) மக்கள் தங்கியிருந்த முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதே. ஹமாஸைச் சேர்ந்த சில தலைவர்கள் இந்தத் தாக்குதலில் இறந்துவிட்டதாகக் கூறும் இஸ்ரேல், தவறுதலாக முகாம்கள் மீது குண்டுகள் விழுந்துவிட்டதாகக் கூறுகிறது.
இஸ்ரேல் கூறும் இந்த தவறுதலான தாக்குதலில்தான், கடந்த எட்டு மாதங்களில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட 36,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களோடு தற்போது 45 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இதில், பெண்கள் மட்டுமே 23 பேர். அதோடு, ஏராளமான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளையும், பல குழந்தைகள் தங்களின் பெற்றோர்களையும் இழந்திருக்கின்றனர்.
தங்களின் அன்புக்குரியவர்கள் இழந்து பலரும் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பல்வேறு நாடுகளும் இஸ்ரேலுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
மறுபக்கம் சமூக செயற்பாட்டாளர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் மில்லியன் கணக்கில் `All Eyes On Rafah’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், ஐ.நா சபையின் ஆன்மா ராஃபாவில் இறந்துவிட்டதாக ஐ.நா-வை பகிரங்கமாக விமர்சித்திருக்கிறார்.
ராஃபாவில் பாதுகாப்பு முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடியதையடுத்து இன்று தனது கட்சி எம்.பி-க்களுடன் உரையாற்றிய எர்டோகன், “ஐ.நா-வால் தனது சொந்த ஊழியர்களைக் கூட பாதுகாக்க முடியாது. இன்னும் என்ன நடப்பதற்காக நீங்கள் (ஐ.நா) காத்திருக்கிறீர்கள். ஐ.நா சபையின் ஆன்மா ராஃபாவில் இறந்துவிட்டது.
அதோடு, இஸ்லாமிய உலகுக்கும் சில வார்த்தைகளை நான் சொல்ல வேண்டும். என்ன பொதுவான முடிவை எடுக்க நீங்கள் காத்திருக்கிறீர்கள்… காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருகிறது. இஸ்ரேல் காஸாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை பின்பற்றாத வரையிலும், அதற்குக் கட்டுப்படாத வரையிலும் எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது” என்று கூறினார்.