சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜாவித் சைபுதின் (32). இவர் சென்னை பாரிமுனை பகுதியில் செல்போன், லேப்டாப் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 17-ம் தேதி தொழிலதிபர் ஜாவித் சைபுதினுக்கு ஒரு செல்போனிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர், `இன்றைக்கு இரவு 9 மணிக்கு பட்டினம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்ட்டி நடக்கிறது. அங்கு நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அதனால் ஜாவித் சைபுதின், அந்தப் பெண்ணின் அழைப்பை ஏற்று, காரில் அங்கு சென்றார். அந்தப் பெண் கூறிய தெருவில் ஜாவித் சைபுதின் காத்துக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரிடம் பேச்சுக் கொடுத்தது. பின்னர் அவ்வழியாக வந்த காரில் அவரை வலுக்கட்டாயமாக அந்தக் கும்பல் ஏற்றியது. அடுத்த சில நிமிடங்களில் அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது.
காரிலிருந்த கும்பல், ஜாவித் சைபுதினிடம் `சத்தம் போட்டால் கத்தியால் குத்தி விடுவோம்’ என மிரட்டியிருக்கிறது. பின்னர் ஜாவித்திடமிருந்த செல்போன்கள், வாட்ச், பணம் ஆகியவற்றை அந்தக் கும்பல் பறித்தது. அதைத் தொடர்ந்து மதுரவாயல் வரை ஜாவித்தின் கண்களை கட்டாமல் காரில் அழைத்துச் சென்ற அந்தக் கும்பல், அதன் பிறகு அவரின் கண்களையும் துணியால் கட்டியது. இதையடுத்து அவரை வீடு ஒன்றில் அந்தக் கும்பல் அடைத்து வைத்தது. அப்போது அந்தக் கும்பலிலிருந்த ஒருவன், `உன்னை கடத்தல் சொன்னவர்கள், கொலை செய்ய சொல்கிறார்கள். அதை செய்தால் 50 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறுகிறார்கள்’ என்று ஜாவித்திடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு ஜாவித் அதிர்ச்சியடைந்து, `என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்’ என்று கதறி அழுதிருக்கிறார்.
பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றொருவன், `பாஸ் வரட்டும். அதற்கு பிறகு இவனை என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்’ என்று கூறினான். இதையடுத்து `பாஸ் வந்துவிட்டார்’ என்று அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கூறியதும், மீண்டும் ஜாவித்தின் கண்களை அந்தக் கும்பல் கட்டியது. அப்போது அங்கு வந்த பாஸ், `நீ என்ன பெரிய ஆளா, உன்னைக் கொலைசெய்ய 50 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள். அதோடு உன் கையை வெட்டி வீடியோ எடுத்து அனுப்பினால், உடனடியாக 20 லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்கிறார்கள்’ என்று மிரட்டியுள்ளார். அதைக் கேட்ட ஜாவித், `என்னைக் கொலை செய்துவிடாதீர்கள், உங்களுக்கு வேண்டிய 50 லட்சத்தை நானே தருகிறேன்’ என்று பயத்தில் கூறியுள்ளார். அதைக் கேட்ட அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், `பணத்தை எப்படி தருவாய்?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஜாவித், `என்னுடைய தம்பிக்கு போன் செய்தால், அவன் பணம் கொண்டு வருவான். நான் வீடு வாங்க பணம் வைத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜாவித், தன்னுடைய தம்பிக்கு போன் செய்து, `அவசரமாக எலக்ட்ரானிக் பொருள்களை வாங்க, எனக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதை நான் சொல்லும் இடத்துக்கு கொண்டு வா’ என்று கூறியுள்ளார். அதனால் ஜாவித்தின் தம்பியும் கடந்த 18-ம் தேதி காலையில் ஜாவித் கூறிய இடத்தில் 30 லட்சத்தை கொடுத்தார். அதன் பிறகு மீதமுள்ள 20 லட்சத்தையும் கொடுத்தார். இதையடுத்து ஜாவித்தை கடத்திய கும்பல் அவரை மீண்டும் காரில் ஏற்றிக் கொண்டு சேத்துப்பட்டு பாலம் பகுதிக்கு வந்தது. பின்னர், ஜாவித்தை கீழே இறக்கி விட்ட அந்தக் கும்பல், ஒரு செல்போனையும் அவரின் கார் சாவியையும் கைச் செலவுக்கு 150 ரூபாயையும் கொடுத்தது. `உன்னுடைய கார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கார் பார்க்கிங்கில் நிற்கிறது’ என்ற விவரத்தையும் சொல்லிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
இதையடுத்து ஜாவித், தன்னுடைய குடும்பத்தினரிடம் கடத்தல் சம்பவத்தைக் கூறினார். பின்னர் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்கு பதிவுசெய்து இந்தத் தகவலை உயரதிகாரிகளுக்கு தெரிவித்தார். உடனடியாக தொழிலதிபர் ஜாவித்தைக் கடத்திய கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், ஜாவித்திடம் பேசிய பெண்ணின் செல்போனை வாங்கி அவர் குறித்த விவரங்களைச் சேகரித்தனர். பின்னர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் கார் நிறுத்தப்பட்டதால், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சோனியா (32) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து பட்டினம்பாக்கம் போலீஸார் கூறுகையில், “வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சோனியா. பட்டதாரியான இவர், சென்னையைச் சேர்ந்த இளைஞரை காதலித்திருக்கிறார். ஆனால் அந்த இளைஞர், சோனியாவை ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காதல் தோல்வியால் சோனியாவின் வாழ்க்கை தடம் மாறியிருக்கிறது. போதைக்கு அடிமையான சோனியா, சென்னையில் உள்ள பார்களுக்குச் சென்றிருக்கிறார். அப்போதுதான் அவருக்கும் இந்தக் கடத்தல் கும்பலுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சோனியா மூலம் தொழிலதிபர்களை மிரட்டி (ஹனி ட்ராப் ஸ்டைலில்) பணம் பறிக்க அந்தக் கும்பல் திட்டமிட்டிருக்கிறது. அதற்கு சோனியாவும் சம்மதித்துள்ளார்.
சென்னையில் உள்ள பார்களுக்கு வரும் தொழிலதிபர்களை சோனியா தலைமையிலான டீம் கண்காணித்து போதையிலிருக்கும்போது, அவர்களின் விவரங்களை சேகரித்திருக்கிறார்கள். அதைப்போலதான் ஜாவித்திடமும் தகவலை சேகரித்து சோனியாவிடம் கொடுத்து போனில் பேச வைத்துள்ளது இந்தக் கும்பல். சோனியாவின் பேச்சில் மயங்குபவர்களை பார்ட்டி, நேரில் சந்தித்து தனிமையிலிருக்கலாம் என்று ஆசைவார்த்தைகளைக் கூறி அழைத்து பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்வதை இந்தக் கும்பல் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
சோனியா டீமிடம் பணத்தை இழந்தவர்களில் பலர் அவமானம் கருதி புகாரளிக்காமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் தொழிலதிபர் ஜாவுதீன் புகாரளித்ததால், சோனியா சிக்கிக் கொண்டார். மற்றவர்களைத் தேடிவருகிறோம். கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிக்கினால்தான் முழு விவரம் தெரியவரும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb