மலையாளத்தில் கிட்டத்தட்ட 400 திரைப்படங்கள், தமிழில் 16 திரைப்படங்கள் எனத் இந்தியத் திரையுலகில் நடிப்பால் உச்சம் தொட்ட, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் மம்மூட்டி.
யதார்த்தமான நடிப்பு, புதுமையான கதாபாத்திரங்கள், அசாத்திய திரைப் படைப்புகள் எனத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கும் மகா கலைஞன் மம்மூட்டி. சமீபத்தில், ‘காதல் – தி கோர்’, ‘ப்ரமயுகம்’, ‘டர்போ’ என வெவ்வேறு கதைக்களங்களில், வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துத் தொடர்ந்து ரசிகர்களையும், திரையுலகினரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ‘காலத்தால் நானும் மறக்கப்படுவேன்’ என்று கூறியுள்ளது வைரலாகியுள்ளது.
அந்த நேர்காணலில், “உங்களின் திரையுலகப் பயணத்தில் என்றாவது எல்லாத்தையும் பண்ணியாயிற்று போதும்’ என்ற எண்ணம் தோன்றியுள்ளதா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த மம்மூட்டி, “இல்லை, என்றும் எனக்கு அப்படித் தோன்றியதில்லை. என் கடைசி மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டிருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், “காலத்தால் நீங்கள் எப்படி நினைவுகூறப்பட விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்குப் பதிலளித்திருக்கும் மம்மூட்டி, “இந்த உலகம் காலத்துக்கும் என்னை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கில்லை. அது சாத்தியமானதுமில்லை. இந்த உலகம் என்னை எவ்வளவு காலம் நினைவில் வைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறீர்கள். ஒரு ஆண்டு, பத்து ஆண்டுகள் அல்லது ஐம்பது ஆண்டுகள் என்னை நினைவில் வைத்துக் கொள்ளுமா? அதன்பிறகு அவ்வளவுதான். இந்த உலகம் எத்தனையோ மகத்தான மனிதர்களைப் பார்த்திருக்கிறது. அவர்களில் ஒரு சிலர் மட்டுமே என்றும் நினைவு கூறப்படுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான நடிகர்களில் நானும் ஒருவன். என்னை எப்படி இந்த உலகம் காலத்துக்கும் நினைவில் வைத்துக்கொள்ளும். இந்த உலகத்தை விட்டுச் சென்ற ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நம்மை நினைவு கூறுவார்கள். அதன்பிறகு எல்லோரும் காலத்தால் மறக்கப்பட்டுவிடுவர் என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இதைக் கண்ட ரசிகர்கள், திரையுலகினர் பலரும் ‘மகத்தான கலைஞனைக் காலம் என்றும் மறக்காது’ என்று உருக்கமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.