நாளை குமரி வருகிறார் மோடி… `மறைமுகப் பிரசார முயற்சி!’ – செல்வப்பெருந்தகை
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடைசி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி, பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தான், நாளை பிரசாரத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, கன்னியாகுமரி வருகை தருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி, அன்று மாலை முதல் ஜூன் 1-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாள்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் சென்று தியானம் மேற்கொண்டார். இந்த நிலையில் இந்த முறை கன்னியாகுமரி வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “மே 30 முதல் ஜூன் 1 வரை நரேந்திர மோடி அவர்கள் கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி அவர்கள் மறைமுகப் பிரசாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் மாண்புமிகு நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88