- நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கால மாற்றங்களுக்கு ஏற்ப தொழிற்சங்க இயக்கங்கள் முன்வர வேண்டும்.
- வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் அரசின் பலத்தைத் தக்கவைத்துக் கொண்டு நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 2027ஆம் ஆண்டு வரை வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
- அரச நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பணிப்பாளர் சபைகளை நியமிப்பதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்.
- எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தொழிலாளர்களை உருவாக்க தொழிலாளர் மையம்.
அரச துறையிலுள்ள சகல பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நாடு இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடென்ற ரீதியில் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளதாகவும், அதற்கு தொழிற்சங்க அமைப்புகளும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தேசபந்து லெஸ்லி தேவேந்திரவின் தொழிற்சங்க பணிகளுக்கு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வேலைத் திட்டத்திற்காக அனைத்து தொழிற்துறையினரதும் கருத்துக்களைப் பெறவும் கலந்துரையாடவும் எதிர்காலத்திற்குப் பொருத்தமான தொழிலாளியை உருவாக்குவதற்கும் “ஊழியர் மையம்” ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளது. அதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ஒரு தொகை பணத்தை ஒதுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வங்கித்துறை உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் அரசாங்கத்தின் பலத்தை வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, 2027 வரை வெளிநாட்டுக் கடனைச் செலுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களுக்கு அரசியல் ரீதியாக பணிப்பாளர் சபைகளை நியமிப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, முறையான திட்டத்தினூடாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை எனவும் வலியுறுத்தினார்.
இந்நாட்டில் தொழிற்சங்க இயக்கங்களின் சார்பாக தேசபந்து லெஸ்லி தேவேந்திர ஆற்றிவரும் அளப்பரிய பணியைப் பாராட்டிய ஜனாதிபதி, அவர் சமூக யதார்த்தத்தை எப்போதும் உணர்ந்து நவீனமயமாக்கலுடன் முன்னோக்கிச் செல்ல பங்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேசபந்து லெஸ்லி தேவேந்திரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவு பரிசொன்றையும் வழங்கினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”லெஸ்லி தேவேந்திர 1964 இல் தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்தார். இது ஒரு முக்கியமான ஒரு காலகட்டமாகும். முதன்முறையாக இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய இடதுசாரி முன்னணியை உருவாக்கியது. என்.எம். பெரேரா, பிலிப் குணவர்தன, எஸ்.ஏ. விக்கிரமசிங்க, பீட்டர் கெனமன், கொல்வின் ஆர். சில்வா அனைவரும் ஒன்றிணைந்து மே தினக் கூட்டத்தில் பங்குபற்றியதை முதன்முறையாக கண்டோம். கோசம் எழுப்பியவாறு பெருந்திரளான கூட்டத்துடன் அவர்கள் காலி வீதிக்கு வந்தனர்.
1964 மே தினம் மறக்க முடியாத ஒரு மே தினம். அதற்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பின்னர், மற்றொரு மாற்றம் ஏற்பட்டது. அதே கூட்டணி உடைந்ததோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சமசமாஜக் கட்சி , அரசாங்கத்தில் இணைந்து கொண்டது. அதனால் இடதுசாரி தொழிற்சங்க இயக்கம் இதிலிருந்து சரிந்தது. அதன்பிறகு, அவர்களுக்கு முக்கிய தொழிற்சங்கங்களில் இணைவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
1970 – 1974 காலப்பகுதியில் மக்கள் படும் துன்பத்தினால் அதனுடன் தொடர்பான தொழிற்சங்கங்கள் அங்கத்துவம் இழந்தன. 1977 முதல் மற்றொரு சகாப்தம் தொடங்கியது. அரசாங்கத்தின் உச்ச பொருளாதாரக் கட்டுப்பாடுகள் 77 வரை நீடித்தது. பின்னர் ஒரு புதிய சகாப்தம் வந்தது. திறந்த பொருளாதாரம் படிப்படியாக உருவாக்கப்பட்டது. தொழிற்சங்க இயக்கமும் அதனுடன் மாறியது. தேசிய தொழிலாளர் சங்கம் முக்கிய தொழிற்சங்கமாக எழுச்சி பெற்றது.
1972இல் தேசிய ஊழியர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், அதற்குப் பிறகு வேறு பல மாற்றங்கள் ஏற்பட்டன. உலக அரசியல் மாறியது. சோசலிச மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான போட்டிக்குப் பதிலாக 1989 முதல் உலகமயமாக்கல் முன்னிலை பெற்றது. மேலும், திறந்த பொருளாதாரத்தால், பல்வேறு மாற்றங்கள் பொருளாதாரத்தில் ஏற்பட்டது. அந்த அனுபவங்களோடு நாங்கள் முன்னோக்கி வந்தோம்.
இன்று தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், உரிமையாளர்கள் என்ற வேறுபாடு இல்லை. வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலை உருவாகியுள்ளது. கோவிட் காலத்தில் நம் அனைவருக்கும் இந்த அனுபவம் இருந்தது. இலங்கையிலும் உலகிலும் இருந்த முறைமை முற்றிலும் மாறிவிட்டது. அதற்கு ஏற்ப தொழிற்சங்கங்கள் மாற வேண்டும்.
அந்த யதார்த்தத்தை உணர்ந்தவர் என்று லெஸ்லி தேவேந்திரவைக் குறிப்பிடலாம். அவர் நவீனமயமாக்கலுடன் முன்னோக்கிச் சென்றார். இன்றிருக்கும் வணிகங்கள் போல் அன்றிருக்கவில்லை. இன்று உலகம் மாறிவிட்டது. நம் நாடும் மாறிவிட்டது. இன்று நாம் திறந்த பொருளாதார முறையில் இருக்கிறோம்.
அதன்படி, புதிய உலகத்துடன் நமது உறவுகளை எவ்வாறு பேணுவது என்பதை தீர்மானிக்க வேண்டும். 1964 கால கோசங்களோ நடவடிக்கைகளோ இன்று எமக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நாம் அனைவரும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக, சந்தைப் பொருளாதாரம் மற்றும் சமூக நீதியை எப்படி ஒன்றாகக் கொண்டு முன்னேறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பல்வேறு நாடுகளில் வெவ்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு புறத்தில் ஸ்காண்டிநேவிய முறைமை உள்ளது. ஜேர்மனி, நெதர்லாந்து, ஜப்பான் போன்று சீனாவும் அந்த பொருளாதாரத்தை ஏதோ ஒரு வகையில் செயற்படுத்துகிறது. நாடென்ற வகையில் நாமும் அந்த நிலையை அடைந்துள்ளோம்.
இன்று நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்து நாடென்ற வகையில் முன்னோக்கிப் பயணிக்கிறோம். நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இன்று சிங்களப் புத்தாண்டையும் வெசாக் பண்டிகையையும் எமது நாட்டு மக்கள் கொண்டாடிய விதத்தைப் பார்க்கும் போது ஒரு வகையில் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் எனக்கு அதில் திருப்தி கொள்ள முடியாது. இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
2027 வரை கடனை செலுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பை நாங்கள் தற்பொழுது பெற்றுள்ளோம். ஆனால் வட்டியைச் செலுத்த வேண்டும். ஆனால் கடனை செலுத்தத் தேவையில்லை. 2042 வரை கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளோம். இது குறித்து ஆராய்ந்து இறுதி உடன்பாடு எட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடன் சுமையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாது.
ஆனால், இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் தொடர்ந்து இருந்தால், மீண்டும் கடன் பெற வேண்டியிருக்கும். இவ்வாறே வெளிநாட்டுக் கடனைப் பெற்றுக்கொண்டிருந்தால், கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், தற்போது உள்நாட்டுக் கடன்கள் பெற்றுக்கொள்வதைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளோம். உள்நாட்டு கடன் வரம்புக்குட்பட்டால், ஊழியர் சேமலாப வைப்பு நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய தொகையும் கட்டுப்படுத்தப்படும்.
உள்நாட்டில் முதலீடு செய்வதா அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்வதா என்பதும் அந்த நிறுவனங்களில் சேகரிக்கப்படும் நிதியை எப்படி முதலீடு செய்வது என்பதும் அடுத்த கேள்வியாக எழுகிறது. அந்த முடிவை யார் எடுக்க வேண்டும் என்பது இன்று தொழிற்சங்க இயக்கத்தில் கவனம் செலுத்தும் விடயமாக மாறிவிட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதில் மிக முக்கியமான துறை நிதித்துறை ஆகும். வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களால் தான் வர்த்தகப் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றை பலப்படுத்தி, வங்கித்துறையில் அரசாங்கத்தின் உரிமையை தக்கவைக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகளைப் பெற்று நிதித்துறையில் அரசாங்கத்தின் பலத்தை தக்கவைக்க பணியாற்ற வேண்டும். அங்கிருந்துதான் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற எதிர்பார்க்கின்றோம்.
ஏனைய அரச நிறுவனங்களுக்கு, அரசியல் ரீதியாக பணிப்பாளர் சபை நியமிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சில புதிய சட்டங்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த நாட்டின் வளர்ச்சி குறித்து புதிதாக சிந்திக்க வேண்டும். பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்படாவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை.
இந்த நாட்டு மக்கள் எதிர்நோக்கும் துயரம் எனக்கு புரிகிறது. இந்த நாட்டில் 2019 இல் 15% ஆக இருந்த வறுமை நிலை இன்று 26% ஆக அதிகரித்துள்ளது. வருமான வழிகள் அற்ற கல்வி வசதி இல்லாத ஒரு பிரிவினர் உள்ளனர்.
அதன்படி, 2032ஆம் ஆண்டுக்குள் அதனை 10% ஆகக் குறைக்க இப்போது ஒப்புக்கொண்டுள்ளோம். இது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வேலைத் திட்டத்தைத் தொடர வேண்டும்.
இந்த பல்தரப்பட்ட வறுமைக்கு தீர்வு காணும் நோக்கில் தான் உறுமய காணி உரிமை வழங்குதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம்.மேலும், கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் புதிதாக சிந்தித்து செயற்பட வேண்டும்.
பொருளாதார ரீதியில் இப்போது நாம் எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளோம். நாம் நடக்க வேண்டும். இந்த ஆண்டு அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், தனியார் துறையிலும் சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வருடம் அதிக நிவாரணங்களை வழங்குவதற்கான பொருளாதார பலம் எம்மிடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும். இதற்காக அரச துறையின் அனைத்து துறைகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளோம்.
அதற்கிணங்க தற்போது அந்த குழுவிற்குப் பொருத்தமானவர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இது கடினமான பயணம். கடந்த பொருளாதார நெருக்கடியினால் இந்நாட்டின் பொது மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செல்ல வேண்டும்.
குறிப்பாக, தொழிலாளர் மையமொன்றை நாம் உருவாக்குவோம். புதிய தொழிற்சங்கங்கள், ஊழியர் உரிமைகளைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை கவனத்தில் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த பணியை தொடர, வருடாந்தம் ஒரு தொகையை ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பில் நாம் மேலும் கலந்துரையாடுவோம்.
இந்த தொழிற்சங்க இயக்கத்தை முன்னோக்கி நகர்த்துவது மற்றும் அரசியலுக்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் இடையிலான உறவையும் எதிர்காலத்தில் சுதந்திரமாக செயல்படுவது குறித்தும் சிந்திக்க வேண்டும். இன்று நமது நாடு ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. லெஸ்லி தேவேந்திர ஆற்றிய சேவைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார,
“பெற்றுத் தா” ” பெற்றுத் தா” என்ற கோஷத்தில் இருந்து தொழிலாளியை விடுவித்து “வளமான நிறுவனம் மற்றும் திருப்திகரமான பணியாளர்கள் குழு” என்ற நிலைக்கு தொழிற்சங்கங்களை கொண்டு வந்தவர் லெஸ்லி தேவேந்திர. பல்லாயிரக்கணக்கான மணி நேரங்களைத் தெருக்களில் செலவழிக்கும் தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக, தொழில்சார் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மேசையில் தீர்வுகளை வழங்க லெஸ்லி தேவேந்திர செயற்பட்டார். தொழிற்சங்கங்களை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் திருப்தியான ஊழியர் சமூகத்தை உருவாக்கும் இவர் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது. எதிர்காலத்தைக் காணும் தொழிற்சங்கத் தலைவராக இவரைக் குறிப்பிடலாம். நவீனத்துவ சிந்தனை கொண்ட லெஸ்லி தேவேந்திர, நாட்டின் பொருளாதாரத்திற்காக தொழிலாளர்களை சரியான வழியில் வழிநடத்தினார். சில தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிற்சாலைகளை மூடி, பொருளாதாரத்தை அழிக்கும்போது லெஸ்லி தேவேந்திர, நிறுவனங்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க ஆற்றிய பணியை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
தொழிற்சங்கத் தலைவர் தேஷபந்து லெஸ்லி தேவேந்திர,
”தற்செயலாகவே தொழிற்சங்கத் தலைவராகும் பயணத்தில் இணைந்தேன். ஆனால் அந்தப் பயணத்தை ஆரம்பித்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, மக்களுக்கு உதவுவதில் எனக்குக் கிடைக்கும் திருப்தியின் காரணமாக அதில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆசையை உணர்ந்தேன். மக்களுக்கு உதவுவதில் உள்ள மகிழ்ச்சியை பணத்தால் வாங்க முடியாது. நான் தொழிற்சங்கங்களை ஆரம்பித்தபோது, முதலாளித்துவ வர்க்கம் அழிக்கப்பட வேண்டும் என்று பல அமைப்புகள் கூறின. நான் அதை ஏற்கவில்லை. ஏனெனில் உலகின் முதலாளித்துவ ஆட்சிகளை உடைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சோசலிச ஆட்சியாளர்கள் முதலாளித்துவப் பொருளாதார முறைமையைத் தான் முன்னெடுத்தனர்.
எனவே, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் தொழிலாளியை சரியான இடத்தில் வைக்க வேண்டிய தேவை எனக்கு இருந்தது. அதனால்தான் “பெற்றுத் தா” ” பெற்றுத் தா” என்ற கோஷங்களில் இருந்து விலகி, “வளமான நிறுவனம் மற்றும் திருப்திகரமான பணியாளர்கள் குழு” என்ற கருத்தோடு முன்னேறினேன். இதன் மூலம், தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பயனுள்ள நிறுவனங்களை உருவாக்க முடிந்தது” என்று அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொகுகே, டலஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பல விசேட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.