இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி கவலையில்லை – ரியான் பராக்

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 26-ம் தேதி நிறைவு பெற்றது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை நிரூபித்தனர். அதில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ரியான் பராக் குறிப்பிடத்தக்க ஒருவர்.

இதில் 2019-ல் அறிமுகம் ஆன முதலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக் முந்தைய சீசன்களில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் இந்த சீசனில் அபாரமாக செயல்பட்ட அவர், 15 போட்டிகளில் 573 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி மற்றும் கெய்க்வாட்டுக்கு அடுத்தபடியாக 3-வது இடம் பிடித்தார்.

அத்துடன் ஜெய்ஸ்வாலுக்கு (625 ரன்கள்) பின் ஒரு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அதனால் விரைவில் அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று சில முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றி கவலையில்லை என்று ரியான் பராக் கூறியுள்ளார். ஏனெனில் தம்முடைய திறமைக்கு நிச்சயம் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-“ஏதோ ஒரு தருணத்தில் நீங்கள் என்னை எடுப்பீர்கள் தானே? அதுவே என்னுடைய நம்பிக்கையாகும். கண்டிப்பாக நான் இந்தியாவுக்காக விளையாடுவேன். ஆனால் எப்போது என்று நான் கவலைப்படப் போவதில்லை. நான் ரன்கள் அடிக்காத சமயங்களில் கொடுத்த பேட்டிகளில் கூட இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று கூறியிருந்தேன். இது என்னுடைய தன்னம்பிக்கையே தவிர திமிர்த்தனம் கிடையாது.

இந்த திட்டத்துடன்தான் எனது அப்பாவுடன் சேர்ந்து 10 வயதில் கிரிக்கெட்டை விளையாடத் துவங்கினேன். எப்போதாவது நான் இந்தியாவுக்காக விளையாடுவேன். அது அடுத்த சுற்றுப்பயணத்திலா, அடுத்த 6 மாதத்திலா, அடுத்த வருடத்திலா என்பது தெரியாது. களத்தில் விளையாடும்போது இவற்றை நான் எடுத்துக் கொள்வதில்லை. அது தேர்வுக் குழுவினரின் வேலை” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.