- நிலைபேறான மற்றும் போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது.
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இன்று (29) முற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற “வலுசக்தி மாற்றத்தின் எதிர்காலப் பாதை” எனும் தலைப்பில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டினார்.
உலக வங்கி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வட்டமேசைக் கலந்துரையாடல், இலங்கையின் வலுசக்தி மாற்றம் குறித்து கலந்துரையாடும் தளமாக அமைந்தது.
அண்மையில் பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் (Pricewater house Coopers) பசுமை ஹைட்ரஜன் தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையின் மீது கவனத்தை செலுத்திய ஜனாதிபதி, அந்த அறிக்கையின் முக்கியத்துவத்தையும், வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை மேலும் ஊக்குவிக்கும் விரிவான திட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அதன்போது, உள்நாட்டு நிபுணத்துவத்தைப் பெறுவதில் உள்ள சிரமங்களைப் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
நிலைபேறான மற்றும் போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இதில் முக்கிய பங்களிப்பை ஆற்றுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, மின்சார மறுசீரமைப்பு சட்டமூலம் மற்றும் காலநிலை மாற்ற சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்காக செயற்படும் இலங்கை தற்போது புதிய பொருளாதார கட்டமைப்பில் கவனம் செலுத்தியுள்ளது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பசுமைப் பொருளாதாரமாக மாறுவதே எமது நோக்கமாக உள்ளதுடன், அதிக போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக அது இருக்க வேண்டும்.
நாம் ஏற்கனவே, அந்த நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதுடன், பொருளாதாரத்தின் சில புதிய துறைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்போது, இலங்கையில் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் இலங்கை முன்னணியில் வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.
மேலும், இலங்கையின் உலர் வலயப் பிரதேசத்தில் காற்றாலை வலுசக்தி உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளுடன், அத்துறையில் விரைவான அபிவிருத்தியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பூஜ்ஜிய உமிழ்வு நிலையை அடைவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பிற்கு இணங்குவதுடன், 2040 ஆம் ஆண்டளவில் இந்த இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சிற்கு ஏற்கக்கூடிய பல திருத்தங்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சீர்திருத்த சட்ட மூலத்தை நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். எதிர்வரும் மாதத்தில் இந்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொருளாதார மாற்ற சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது இப்போது உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது நிச்சயமாக இந்த ஜூலை தொடக்கத்தில் சட்டமாக மாறும். எனவே, இந்த நடவடிக்கைகள் தற்போது அரசியலமைப்பு சபையில் நடைபெற்று வருகின்றன.
மேலும், காலநிலை மாற்ற சட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகிறது, இது தொடர்பான மூன்றாவது சட்டமாகும். நான்காவதாக, வலுசக்தி மாற்றத்திற்கான சட்டத்தை நாம் கலந்துரையாட வேண்டும். சில நாடுகளில் வலுசக்தி மாற்றம் தொடர்பான சட்டங்கள் உள்ளன. நாங்கள் அதை ஆய்வு செய்து வருகிறோம், மேலும் தெற்கு அவுஸ்திரேலியா போன்ற சில பகுதிகளில் அந்தச் சட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்துள்ளோம். வலுசக்தி மாற்றத்திற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு இது நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு மட்டுமின்றி, மின்சாரம் விநியோகிப்பதற்கும் அந்த துறைகளை திறந்து விடுகிறோம். அதன்போது தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கும்.
அது இல்லாமல், 2040 அல்லது 2050 க்குள் எங்கள் இலக்குகளை அடைய வேறு எந்த வழியும் இல்லை. நிதி அமைச்சும் ஏனைய துறைகளுடன் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது.
சுற்றாடல் அமைச்சும் மற்றும் மின்சார அமைச்சும் பசுமை நிதியியல் தொடர்பான கொள்கைகளை உருவாக்கி வருகின்றன, இவை பசுமை ஹைட்ரஜனுக்கு மாறுவதற்கும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துவதற்கும் எங்களின் திட்டங்களாகும்.
40 ஜிகாவோட் என மதிப்பிடப்பட்ட பசுமை ஹைட்ரஜனுக்கான அதிக வலுசக்தி நம்மிடம் உள்ளது. சில நேரங்களில் அது இன்னும் அதிகமாக இருக்கலாம். மன்னார் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் அதில் பல பிரச்சினைகள் உள்ளன, அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அங்கு தனியார் துறை முதலீடுகளைப் பெற அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்தியா ஏற்கனவே தனது திட்டங்களில் பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்வதை உள்ளடக்கியுள்ளது, அதற்காக அவர்கள் கணிசமான அளவு பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து வருகின்றனர்.
மேலும், கடலுக்கு அடியில் புதிய கேபிள் இணைப்புக்கள் கட்டமைக்கப்பட்டு அதனூடாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அதன்படி அவுஸ்திரேலியா – சிங்கப்பூர் , சிங்கப்பூர் – இந்தியாவுக்கும் இடையேயான இணைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. கடலுக்கு அடியில் உள்ள இந்தியா-சிங்கப்பூர் கேபிளை இலங்கையுடன் இணைக்க வாய்ப்பு உள்ளது. பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் பட்சத்தில் இலங்கை வலயத்தின் நீண்டகால விநியோக மத்தியஸ்தானமாக மாறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
பசுமை ஹைட்ரஜன் வளங்கள் நிறைந்த பகுதிக்கு அருகில் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு ஆகிய மூன்று துறைமுகங்கள் நம்மிடம் உள்ளன. இந்தியாவுடன் தரைவழிப் பாதை மற்றும் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தரைவழி இணைப்பு குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அதனால் தென்னிந்தியாவை அண்மித்துச் செல்லும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுசக்தி தொடர்பை பலப்படுத்துவது குறித்து நாம் ஏற்கனவே ஆலோசித்து வருகிறோம். இவை அனைத்தும் சரியாக நடைபெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்துவதற்கான வரையறை மற்றும் சாத்தியங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price water house Coopers) நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் பற்றிய அதன் சமீபத்திய அறிக்கையை வெளியிட்டது. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இலக்கை அடைய வேண்டும். அதற்கான நிபுணத்துவம் நம்மிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கு வெளிநாடுகளின் உதவி தேவை. எனவே, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இதற்கு ஆதரவளிப்பர். பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்க்கும் நிலையில், இதனூடாக முன்னேற வேண்டும்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
இலங்கையின் வலுசக்தி மாற்றத்திற்காக சர்வதேச தரப்பினர்களுடன் இணைந்து மூலோபாய முயற்சிகள் உட்பட பல வேலைத்திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அவற்றில், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாடு, பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் செலவினங்களைக் குறைத்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களுக்கு உயர் நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.
2030 ஆம் ஆண்டளவில், நாட்டின் மின்சக்தி தேவையில் 70% இனை, வலுசக்தியின் ஊடாக பெற்றுக்கொள்ளல், அத்துடன் 2040 ஆம் ஆண்டளவில் கார்பனை அற்ற நிலையை அடைதல், என்பன இலங்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் இலக்குகளாக மாறியுள்ளன. இந்த செயல்முறை COP26 இன் கொள்கைகளுக்கு ஏற்ப புதிய நிலக்கரி ஆலைகளுக்கு எதிரான கொள்கையையும் உள்ளடக்கியுள்ளது. இருப்பினும், 2030க்குள் 4000 மெகாவாட் புதிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கட்டமைப்பில் இணைத்துகொள்வது போன்ற சவால்கள் உள்ளன.
திட்ட மதிப்பீடு மற்றும் பொருத்தமான விலை நிர்ணயம் செய்யப்படும் போது, தொழில்நுட்ப உதவி தேவைப்படும். சரியான தொழில்நுட்பத்துடன் சரியான முதலீட்டாளர்களை ஈர்ப்பதும், வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலையை உறுதி செய்வதும் முக்கியமானதாகும். வலுசக்தி துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களை மேம்படுத்துவதும் முக்கியம். அதனை பலப்படுத்துவதே மின்சார மறுசீரமைப்புச் சட்டத்தின் நோக்கமாகும். இலங்கை மின்சார சபை மற்றும் நிலைபேறான வலுசக்தி அதிகார சபை போன்ற ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களுக்கு அதிகாரமளிக்க வேண்டியது முக்கியமாகும்.
உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் எச். ஹதாத்-சர்வோஸ் (Faris H. Hadad-Zervos),
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் முதலீடு செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம். 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்சக்தி தேவைகளில் 70% இனை வலுசக்தி ஊடாக பெறுவதும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் பிராந்திய சக்தியாக மாறுவதற்கான இலங்கையின் இலக்கையும் பாராட்டுகிறேன். COP27 இல் வெளியிடப்பட்ட காலநிலை செழுமைத் திட்டம், காலநிலை இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் தேசிய மூலோபாயத்தை குறிக்கிறது. இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் விரிவாக்கம் மற்றும் சூரிய மற்றும் காற்றாலை சக்தியை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் மகிழ்ச்சியடைகிறேன்.
தற்போதுள்ள நிறுவனத் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கொள்முதலுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை மேம்படுத்துவது தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பதில் முக்கியமானது. நிர்வாகம், செயல்திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சார மறுசீரமைப்புகளுக்கு கொள்கை ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் நிதியுதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி, ஏனைய தரப்பினர்களுடன் இணைந்து தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இராஜாங்க அமைச்சர்களான, டி.வீ. சானக, இந்திக்க அனுருத்த, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை உட்பட துறைசார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், உலக வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி (AIIB), ஜப்பான் ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் (USAID), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.