கிராமிய மட்டத்தில் கோழி வளர்ப்பு தொழிலை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை…
முட்டை அடைகாக்கும் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் சீதாவக்கையை சேர்ந்த 5000 பேருக்கு நன்மை…
கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோக நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நேற்று முன்தினம் (28.05.2024) சீதாவக்கை பிரதேச சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வழங்கப்படும் இந்த இயந்திரம் ஒன்றின் மூலம் ஐந்து குடும்பங்களுக்கு நேரடி வருமான வழிகள் திறக்கப்படுவதுடன் அந்தக் குடும்பங்களைச் சார்ந்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் இதன் மூலம் மறைமுகப் பயன்களைப் பெறுவார்கள். இந்த திட்டத்தின் நோக்கம் வருமானம் ஈட்டும் வழிகளை மேம்படுத்துதல், குடும்ப போசாக்கினை மேம்படுத்துதல், நாட்டில் பொதுவாக முட்டை உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் வீட்டு மட்டத்தில் தன்னிறைவான வீட்டுத் தோட்டங்களை உருவாக்குதல் ஆகும். இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சீதாவக்கை பிரதேசத்தை சேர்ந்த 5000 பேர் பயனடைவார்கள்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்-
நம் நாட்டின் குறைந்த வருமானம் பெறுவோர்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும், கிராமம் கிராமமாக வீட்டுத் தோட்டச் செய்கையை ஊக்குவிக்கவும், அப்பகுதியை பிரபலப்படுத்தவும், போசாக்கான உணவை பிள்ளைகளுக்கு வழங்கவும் சீன மக்கள் குடியரசு இந்த இயந்திரங்களை வழங்கியுள்ளது. சீதாவக்கை மற்றும் பாதுக்கை பிரதேசத்திற்கு இந்த விசேட வாய்ப்பை வழங்கி அதனை வெற்றியடையச் செய்ய முன்வந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் சுயதொழில் திட்டம் தொடர்பான மேலதிக திட்டமாக இதை பிரபலப்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம். இது ஏற்கனவே பல மாகாணங்களில் பிரபலமான வருமான மூலமாக உள்ளது.
ஹங்வெல்லயில்தான் இந்தத் தொழில் ஆரம்பிக்கப்பட்டது. பிலிப் குணவர்தன அவர்கள் விவசாயம் மற்றும் உணவு அமைச்சராக அன்று இலங்கையில் இந்த வியாபாரத்தை அப்போது ஆரம்பித்த போது, உலகில் இவ்வளவு பெரிய இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கவில்லை. எமது மாகாணத்தில் 1957ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தச் சந்தியில் உள்ள ஹங்வெல்ல கிராம சபை அலுவலகத்தில் ஒரு இயந்திரம் நிறுவப்பட்டது. நமது பாரம்பரியத்தையும் பெருமையையும் நாட்டுக்கு எடுத்துரைக்கும் திறனைப் பாதுகாத்து, கிராமத்தில் உள்ள மக்களின் ஆதரவுடன் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாம் எதிர்கொள்ளும் இந்த இக்கட்டான காலத்தில், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை முன்னெடுத்துவருகின்றனர். அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும்.
பிரதேச செயலக மட்டத்தில் ஐயாயிரம் வரையிலான புதிய தொழில் முயற்சியாளர்களாக பெண்கள் தரப்புக்கும் கைகொடுக்கும் புதிய சந்தர்ப்பத்தை ஜனாதிபதி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார். பழைய கடன்களையெல்லாம் நீக்கிவிட்டு புதிய தொழிலை தொடங்க முன்வரும் பெண் தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகம், உற்பத்தி என எதுவாக இருந்தாலும், புதிய தொழில் முயற்சியாளர்களாக முன்வருவதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அச்சமின்றி முன்வாருங்கள். இந்த பொருளாதாரத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றவற்றை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த நடவடிக்கைகளில் வெற்றி பெற முன்வாருங்கள். பிரதேச சபைகளுக்கும் பல்வேறு பயிற்சிகளை அளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் என்ற வகையில், பாடசாலையை விட்டு வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கும், புதிய தொழில்வாய்ப்புகளைத் தேடும் அனைவருக்கும் பயிற்சி அளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இளம் தலைமுறையினரின் எதிர்காலம் அவர்களது தொழில் வாழ்க்கையில் தங்கியுள்ளது.
புவக்பிட்டிய, மாபுல, வேரகொல்ல, உக்கல்ல ஆகிய கிராமங்களுக்கு முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி, சீதாவக்க பிரதேச செயலாளர் கே. எஸ். தில்ஹானி உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு