மதுரை: மதுரையில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கில் வியாழக்கிழமை காலையில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சென்னையைச் சேர்ந்த பைக் ரேசர் டிடிஎஃப் வாசன். இவர் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்றார். மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதியில் செல்போனில் பேசியபடி கார் ஓட்டியதை கேமராவில் பதிவு செய்து அவருடைய யூடியூப் சேனலில் பதிவிட்டார். இதுதொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்பட்டை சார்பு ஆய்வாளர் மணிபாரதி அளித்த புகாரின் பேரில் வாசனை அண்ணாநகர் போலீஸார் வியாழக்கிழமை காலையில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வாசனை மதுரை 6-வது நீதித்துறை நடுவர் முன்பு போலீஸார் இன்று காலை ஆஜர்படுத்தினர். அப்போது வாசன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தான் கார் ஓட்டியதால் விபத்து ஏற்படவில்லை. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மேலும் தனக்கு ஜூன் 4 முதல் படப்பிடிப்பு உள்ளது. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாசன் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சுப்புலெட்சுமி முன்பு மதியம் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. “வாசன் தொடர்ந்து இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பைக் ஓட்டுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாமீன் வழங்கக்கூடாது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதையேற்க மறுத்து டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். ‘விதிமீறல் செய்ததற்கு வருத்தம் தெரிவித்தும், இனிமேல் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடமாட்டேன்’ எனவும் வீடியோ வெளியிட வாசனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், “என்னை பார்த்துதான் மக்கள் கெட்டுப்போவதாக கூறுகிறார்கள். வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது அதைப் பார்த்து கெட்டுப்போக மாட்டார்களா? நான் செல்போனை காதில் வைத்துப் பேசவில்லை. ஸ்பீக்கரில் போட்டுத் தான் பேசினேன். யார் உயிருக்கு பங்கம் விளைவித்தேன்?
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தானே. என்னுடன் வாருங்கள் எத்தனை பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்கள், எத்தனை பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் என்பதைக் காட்டுகிறேன்.குடிபோதையில் வாகனம் ஓட்டி 2 பேரை கொன்றவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறையை நம்பியே உள்ளேன். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். எந்தப் பின்னணியும் இல்லாமல் 23 வயது பையன், முன்னேறினால் இப்படித்தான் செய்வீர்களா? இளைஞர்களை வளரவிடமாட்டீர்களா?” என்றார்.