சென்னை: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ஏப்.19-ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இறுதிகட்ட தேர்தல் நாளை மறுநாள்(ஜூன் 1) நடைபெற உள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பதிவானவாக்குகள் அடங்கிய மின்னணுஇயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வாக்குகள் எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணப்படும்போது, ஒவ்வொரு மையத்திலும் சட்டப்பேரவை தொகுதிவாரியாக தனித்தனியாக அமைக்கப்பட்ட அறைகளில், மின்னணு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொருஅறையிலும் குறைந்தபட்சம் 14 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் எண்ணிக்கை, வாக்குப்பதிவு அதிகரித்த இடங்களில் கூடுதல் மேஜைகள் போடப்பட்டுள்ளன. அந்த வகையில் 234 வாக்கு எண்ணிக்கை அறைகளில் 3,300 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இதுதவிர, வாக்கு எண்ணிக்கை பணியில் 10 ஆயிரம் அலுவலர்கள், 24 ஆயிரம் உதவியாளர்கள், 4,500 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பயிற்சி விரைவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 5 முதல் 22 பேர் வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவும் வகையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, சிறப்பு வட்டாட்சியர் அளவில் பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் இந்தப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 22 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணியில் 10,000 அலுவலர், 24,000 உதவியாளர்கள், 4,500 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.