திருவாரூர்: திருவாரூர் அருகே பாமாயில் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதை தடுக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் அருகே கருப்பூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பாமாயில் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை சுற்றி சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நாள்தோறும் இந்த தொழிற்சாலைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாகவும், இதிலிருந்து வெளியேற்றப்படும் ஒரு லட்சம் லிட்டர் கழிவு நீரை நிலத்துக்கு அடியில் பம்பிங் செய்வதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், சேமங்கலம் பாசன வாய்க்காலிலும் இந்த கழிவு நீரை வெளியேற்றுவதால் கானூர், அடியக்கமங்கலம், சேமங்கலம், அலிவலம், சித்தாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் அந்தத் தொழிற்சாலை முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வாயுவானது காற்றில் கலந்து, பொதுமக்கள் சுவாசிக்க முடியாத சூழல் உருவாகுவதாகவும், இதனால் மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கும் விவசாயிகள், உடனடியாக இந்தத் தொழிற்சாலையை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.