பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்கு 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்காக 824 திட்டங்களுக்காக 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான  டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் இன்று (30) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளும் ஆராயப்பட்டதோடு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன.

யாழ் மாவட்டத்தில் அகழ்ந்த சுண்ணாம்புக்கல்லை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டதோடு கீழ் பாலியாற்று குடிநீர் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்தல், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், கடல் கடந்த தீவுகளுக்கான அம்புலன்ஸ் சேவை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக திட்டம், சட்டவிரோத மண் அகழ்வுகளை கட்டுப்படுத்தல், கருவேல மரங்களை அழித்தல் , தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

பாடசாலை ஆரம்ப மற்றும் முடியும் நேரங்களில் கனரக வாகனங்கள் வீதியில் செல்வதை கட்டுப்படுத்தல், யாழ் நகரத்தில் பொது மலசலகூடம் அமைத்தல் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்தும் அவ்வாறான சம்பவம் இனிமேல் நடைபெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.