`பாடநூல்களில் திராவிட இயக்க ஆதிக்கம்!' – ஆளுநர் ரவியின் பேச்சும் பின்னணியும்!

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்ட்டின் தொடக்க நாளில் பேசியபோதே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “கட்ந்த 2021-ம் ஆண்டு நான் தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்ற போது, மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக் கழகங்களும் தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமால் தனித்தனியாக செயல்படுவதையும் கவனித்தேன். இதனால், தரத்தை மேம்படுத்த முடியாமல் பல சவால்களை பல்கலைக்கழகங்கள் எதிர்கொண்டு வந்தன. இவை எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தன!” எனக்கூறி தி.மு.க அரசை சீண்டினார்.

ஊட்டி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி

இந்த நிலையில், இரண்டாம் நாள் மாநாட்டில் தி.மு.க அரசை மீண்டும் சீண்டும் வகையில் மற்றொரு கருத்தை உதிர்த்திருக்கிறார். மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் உயர் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு போதுமான விழிப்புணவை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பல கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள்தான் பாடம் நடத்துகிறார்கள். அதேநேரம், கல்லூரி மாணவர்களை அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதுதான் கல்லூரி மாணவர்கள் செய்ய வேண்டிய வேலையா?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “சில இடங்களில் உயர் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி பள்ளிகளுக்கான உபகரணங்கள், தளவாடப் பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 1,500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். ஆனால், அதில் 5% மாணவர்களே தரமிக்கவர்களாக இருகின்றனர். மற்றவர்களின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. நெட்(NET) தேர்வு குறித்து அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. தனியார் பல்கலைக்கழகங்கள் பயிலும் மாணவர்களுக்கே அதிக விழிப்புணர்வு உள்ளது. இதனால் அரசு பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர்!” எனக் குற்றம்சாட்டினார்.

முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ரவி

மேலும், “தமிழக பாடத்திட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்ற ஒரு சில சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. ஏனைய சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வரலாறு குறைவாகவே உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள், இயக்கங்கள் குறித்த வரலாறு மறைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல தலித் தலைவர்களைப் பற்றி வரலாறுகளும் அதிமாக இல்லை. இதனால் எனக்கு வேதனைதான் ஏற்படுகிறது. ஆனால், திராவிட இயக்கம் மற்றும் அதன் தலைவர்களின் வரலாறோ நிறைந்திருக்கின்றன. இதுமட்டுமே வரலாறு கிடையாது. இப்படி வரலாற்றை மறைப்பது அவமதிப்பு!” என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இதற்கு சமூக வலைதளத்தில் தி.மு.கவினர் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி இப்படி பேசியிருப்பது முதல்முறையல்ல! ஏற்கெனவே கடந்த ஆண்டு திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ரவி, “இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் பெயர்ப் பட்டியலைத் தாருங்கள் என தமிழ்நாடு அரசிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவர்களோ 40-க்கும் குறைவான பெயர்ப் பட்டியலைத்தான் என்னிடம் கொடுத்தார்கள். பிறகு, நானாகத் தேடிப் படித்ததில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தமிழ்நாட்டில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகப் போராடியிருப்பதைத் தெரிந்துகொண்டேன். அந்த வகையில், முத்துராமலிங்கத் தேவர் ஒரு மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால், அவரை ஒரு சாதியின் தலைவராக இன்று சுருக்கிவிட்டார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிகள் எந்தச் சமூகத்திலிருந்து வந்தார்கள் என்பதிலிருந்து அவர்களைச் சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி, மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களெல்லாம் மறக்கடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இங்கு ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டு அப்படிச் செய்தார்கள். அதனால்தான், அவர்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படவில்லை. பாடப்புத்தகங்களில் அவர்களின் வரலாறும் அழிக்கப்பட்டது!” எனப் பேசினார். ஆளுநரில் தற்போதைய பேச்சு, முன்னதாக அவர்பேசியதன் நீட்சியாக தான் பார்க்க முடிகிறது. மறுபக்கம் தமிழக அரசு உயர்கல்வியில் செய்த சாதனைகள் குறித்து அறிக்கை வெளியிட்டு ஆளுநருக்கு மறைமுக பதில் கொடுத்துள்ளது. இதன் மூலம் ஆளுநர் – திமுக அரசு இடையே உயர்கல்வியில் மீண்டும் பனிப்போர் தொடங்கியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.