பீஜிங்,
சீனாவின் பீஜிங் நகரில் சீன-அரபு நாடுகளுக்கான ஒத்துழைப்பு மாநாடு இன்று தொடங்கியது. இதில், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் துனிசியா உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சீனாவுடன் வர்த்தக உறவை விரிவாக்கம் செய்வது மற்றும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போருடன் தொடர்புடைய பாதுகாப்பு விசயங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான நோக்கங்களுடன் மாநாடு நடைபெற்றது.
இதனை சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, கடந்த அக்டோபரில் இருந்து பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் கடுமையாக அதிகரித்து உள்ளது. இதனால், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். இந்த போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, சீனா மற்றும் அரபு நாடுகள் உள்ளன.
கடந்த வார இறுதியில், காசாவின் தெற்கு நகரான ரபா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், பாலஸ்தீனர்கள் 45 பேர் பலியானார்கள். இதனால், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. போரில் மொத்தம் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்து உள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
இந்நிலையில், சீன-அரபு மாநாட்டில் பேசிய ஜின்பிங், இரு நாடு தீர்வுக்கு சீனாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். காலவரையின்றி போர் தொடர கூடாது என்றும் அவர் கூறினார். தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்திற்கு அவர் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், காசாவுக்கு ரூ.574.48 கோடிக்கு நிதியுதவி வழங்கப்படும் என உறுதி கூறினார். இதேபோன்று, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் அகதிகளாக ஆனவர்களுக்கான உதவி மற்றும் நிவாரண உதவி வழங்கும் ஐ.நா. அமைப்புக்கு ரூ.24.97.73 கோடி நன்கொடை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.
போர் பற்றி உரையாற்றிய அவர் தொடர்ந்து பேசும்போது, வர்த்தகம், எரிசக்தி, விண்வெளி மற்றும் சுகாதார நலன் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது பற்றி அரபு நாடுகளுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.