மோடி: நீர் ஆகாரம்; குமரிக் கடலில் 3 நாள்கள் தியானம் – பிரதமர் குமரி விசிட் அப்டேட்!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்துவரும் நிலையில், இறுதிகட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறையில் 3 நாள்கள் தியானம் மேற்கொள்வதற்காக, இன்று மாலை 5:10 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. கோயில் ஸ்ரீகாரியம் (மேலாளர்) ஆனந்த் பகவதி அம்மன் புகைப்படத்தை வழங்கி பிரதமரை வரவேற்றார். பின்னர் படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் சென்றார் பிரதமர் மோடி. பிரதமர் சென்ற படகில் பாதுகாப்புப் படை வீரர்கள் அமர்ந்திருந்தனர். பிரதமரின் படகுக்கு இருபுறமும் இரண்டு படகுகளில் பாதுகாப்பு வீரர்கள் உடன் சென்றனர். 3 நாள்கள் விவேகானந்தர் நினைவு பாறையில் தியானத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி, 1-ம் தேதி மாலை ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்குச் செல்லும் பிரதமர் மோடி

பகவதி அம்மன், சிவபெருமானை நினைந்து ஒற்றைக்காலில் வடக்கு நோக்கி தவம் செய்ததாகக் கூறப்படும் கன்னியாகுமரி ஸ்ரீ பாத பாறையில் 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விவேகானந்தர் தியானத்தில் ஈடுபட்டார். அந்த பாறைமீது விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தனியாக தியான மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள உள்ளார். விவேகானந்தர் மூன்று நாள்கள் சாப்பிடாமல் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அது போன்று பிரதமர் மோடி 3 நாள்கள் திட உணவு எடுத்துக்கொள்ளாமல், இளநீர் உள்ளிட்ட திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு, தியானத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி

பிரதமரை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வரவேண்டாம் என டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகம் அறிவித்திருந்தது. இதையடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளோ யாரும் கன்னியாகுமரிக்கு வரவில்லை. அதே சமயத்தில் பிரதமரை வரவேற்க முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி வந்தார்.

அவருக்கு பிரதமரை வரவேற்க அனுமதி இல்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, பிரதமர் மோடி வருவதற்கு முன்பே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். பிரதமர் மோடி தியானம் செய்யும் 3 நாள்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னியாகுமரி லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்கள் குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.