சென்னை: யூடியூபில் ‘Playables’ என்ற அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வெப் பிளாட்பார்ம் பயனர்கள் நேரடியாக யூடியூப் செயலியில் இருந்தபடியே சில லைட்வெயிட் கேம்களை விளையாடி மகிழலாம்.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம்தான் யூடியூப். உலகளவில் 2 பில்லியனுக்கும் மேலான மக்கள் இந்த சேவையை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை பார்க்க முடியும்.
இந்த சூழலில் தங்களது தளத்தின் பொழுதுபோக்கு சார்ந்த அம்சத்தை மேம்படுத்தும் வகையில் பிளேயபிள்ஸ் அம்சத்தை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதன் டெஸ்டிங் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது ப்ரீமியம் பயனர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த அம்சம் இருந்தது.
ஆக்ஷன், ஸ்போர்ட்ஸ் என பல்வேறு கேட்டகிரியில் மொத்தமாக 75 கேம்களை யூடியூப் இந்த அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு வழங்குகிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் ஷோ டவுன், கட் தி ரோப் போன்ற பிரபல கேம்களும் இதில் அடங்கும்.
பயன்படுத்துவது எப்படி? பயனர்கள் நேரடியாக யூடியூப் தளத்தில் இதன் அக்சஸை பெறலாம். அப்படி இல்லாத பட்சத்தில் பிளேயபிள்ஸ் டெஸ்டினேஷன் பேஜ் மூலமாகவும் இதனை நேரடியாக அக்சஸ் செய்யலாம். இப்போதைக்கு இந்த அம்சம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது.
வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூடியூப் வெர்ஷன் 18.33-க்கு மேல் பயன்படுத்தி வரும் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். அதன் மூலம் தங்களுக்கு பிடித்த கேம்களை தேர்வு செய்து விளையாடலாம்.