“ரஃபா மீதான தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது” – இந்திய வெளியுறவுத் துறை

புதுடெல்லி: ரஃபாவில் உள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “ரஃபாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்கள் மீதான தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த கவலை அளிக்கிறது.

இந்த போரில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 1980-களின் பிற்பகுதியில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் இணைந்து அமைதியுடன் வாழும் பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சாத்தியமான மற்றும் சுதந்திரமான அரசை நிறுவுவதை உள்ளடக்கிய இரு நாட்டு தீர்வை நாங்கள் நீண்டகாலமாக ஆதரித்து வருகிறோம்.

இஸ்ரேலிய தரப்பு ஏற்கனவே இது ஒரு சோகமான விபத்து என்று பொறுப்பேற்று, சம்பவம் குறித்து விசாரணையை அறிவித்துள்ளது என்பதையும் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்” என்று ரன்தீப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” புகைப்படம் இன்ஸ்டாகிராமில் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.