திருவள்ளூர்: கடந்த 2017-ம் ஆண்டு முக்கிய பிரமுகர்களின் காலை சிற்றுண்டிக்காக திருத்தணி முருகன் கோயில் நிதியிலிருந்து ரூ.6.13 லட்சம் முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது என திருத்தணி காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் புகாரளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இன்று ‘ஆலயம் காப்போம்’ அமைப்பின் நிர்வாகி களுடன் திருத்தணி முருகன் கோயில் முறைகேடு தொடர்பாக திருத்தணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். 38 பக்கங்கள் கொண்ட அந்தப் புகார் மனுவில், ‘தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற்ற இந்துசமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது முக்கிய பிரமுகர்களின் காலை சிற்றுண்டிக்காக திருத்தணி முருகன் கோயில் நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்து 13 ஆயிரத்து 657, முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் தொடர்புடைய இந்துசமய அறநிலையத்துறையின் திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் மனு அளித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், “தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய பிரமுகர்களின் காலை சிற்றுண்டிக்காக திருத்தணி முருகன் கோயில் நிதியிலிருந்து, ஒரு சிற்றுண்டிக்கு ரூ.2,045 என, ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்து 657, முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அப்போது பணியில் இருந்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், முருகன் கோயில் இணை ஆணையர், மண்டல தணிக்கை அதிகாரி ஆகியோர் மீது இன்றே வழக்கு பதிவு செய்து, நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என்றார்.