ஐபிஎல் 2024 தொடரில் விராட் கோலி ஆடிய விதம் குறித்தும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குறித்தும் தொடர்ச்சியாக அம்பத்தி ராயுடு விமர்சனம் வைத்துள்ளார். இதற்கு ஆர்சிபி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்பத்தி ராயுடுவுக்கும், அவரது மனைவிக்கும் ரசிகர்கள் கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தொந்தரவு கொடுப்போம் என மிரட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிரிக்கெட்டர்களும், அம்பத்தி ராயுடு அனுதாபிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
விராட் கோலி – அம்பத்தி ராயுடு பிரச்சனை
விராட் கோலிக்கும், அம்பத்தி ராயுடுவுக்கும் 2019 ஆம் ஆண்டு முதல் பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. அந்த ஆண்டு நடைபெற்ற உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ராயுடுவை விராட் கோலி சேர்க்கவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ராயுடு அந்த விஷயத்தில் விராட் கோலி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். சமயம் பார்த்து அவரை அட்டாக் செய்ய வேண்டும் என காத்திருந்த ராயுடுவுக்கு, 2024 ஆம் ஆண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுடன் வெளியேது. இதனை அவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
அம்பத்தி ராயுடு சரமாரி விமர்சனம்
ஆர்சிபி அணியில் பல நல்ல பிளேயர்கள் இருந்தபோதும் அந்த அணி கோப்பையை வெல்லாததற்கு மிக முக்கிய காரணம், தனிப்பட்ட ஒருவரின் சாதனையை அந்த அணி கேப்டன்களும், அணி நிர்வாகமும் அங்கீகரித்ததால் தான் என அம்பத்தி ராயுடு விராட் கோலியை மறைமுகமாக சாடினார். மேலும், இந்த ஆண்டு விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வென்றதால் மட்டும் என்ன பயன், அவர் விளையாடும் அணி 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என தெரிவித்தார். இந்த அணுகுமுறையை ஆர்சிபி அணி மாற்றினால் மட்டுமே அந்த அணி கோப்பை வெல்லும் என்றும் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
அம்பத்தி ராயுடுவுக்கு மிரட்டல்
அம்பத்தி ராயுடுவின் நண்பர் ஒருவர் இது குறித்து எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், ” நான் சொல்வது மிகவும் சீரியஸான விஷயம், இதனை அம்பத்தி ராயுடுவின் மனைவியே என்னிடம் நேரடியாக கூறினார். சோஷியல் மீடியாக்களில் கொலை மிரட்டல், பாலியல் தொந்தரவு குறித்த எச்சரிக்கைகள் அதிகம் வருவதாக அச்சத்துடன் தெரிவித்தார். ராயுடுவின் மூத்த மகளுக்கு 4 வயது தான் ஆகிறது. ஆனால் அந்த பச்சிளம் குழந்தைக்கு எல்லாம் மிரட்டல் விடுப்பது என்னமாதிரியான அணுகுமுறை என்று தெரியவில்லை. இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்” என கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.