1892-ம் ஆண்டு கன்னியாகுமரி வந்த விவேகானந்தர், கடல் நடுவே 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாறையில் அமர்ந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தியானம் செய்தார். பின்னர், அது விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்பட்டது. இதற்கு அப்போது எதிர்ப்பும் கிளம்பியது. அந்தப் பாறை தங்களுக்கு சொந்தம் என்று ஒரு பிரிவினர் உரிமை கொண்டாடினர்.
இதனால், சர்ச்சை எழுவதைத் தடுக்க 1963-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த பக்தவத்சலம் தலைமையிலான தமிழக அரசு சார்பில், ‘இந்தப் பாறை விவேகானந்தர் தியானம் செய்த இடம்’ என்று எழுதப்பட்ட பெயர் பலகை நிறுவப்பட்டது. அதே 1963-ம் ஆண்டுதான் விவேகானந்தரின் நூற்றாண்டு. இதை முன்னிட்டு, அந்த பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், சச்சரவுகள் ஏற்படும் என்றும் பாறையின் அழகு கெடும் என்றும் அப்போது மத்திய கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்த ஹுமாயூன் கபீர் கருதினார். அப்போதைய தமிழக அரசும் மண்டபம் எழுப்ப அக்கறை காட்டவில்லை.
இதையடுத்து, இந்தப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலையிட்டது. அந்தச் சமயத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவராக கோல்வால்கர் இருந்தார். அவர் விவேகானந்தர் மண்டபம் கட்டும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவரும் சமூக ஆர்வலருமான ஏக்நாத் ரானடே வசம் ஒப்படைத்தார். விவேகானந்தர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர். இன்றைக்கும் விவேகானந்தர், அவரது குருவான ராமகிருஷ்ணர் ஆகியோர் மீது மேற்கு வங்க மக்களுக்கு மிகுந்த அன்பும் பக்தியும் பெருமிதமும் உண்டு. அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஹூமாயூன் கபீரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்தான். அந்த மாநிலத்தில் இருந்துதான் எம்.பி.யாக வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்தார்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க எழுந்த முட்டுக்கட்டைகளை உடைக்க நினைத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏக்நாத் ரானடே கொல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரானடே, ‘‘மேற்கு வங்கத்தில் இருந்து வெற்றி பெற்று மத்திய அமைச்சராகி உள்ள ஹுமாயூன் கபீர், மேற்கு வங்கத்தின் பெருமையாக விளங்கும்விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்ட முட்டுக்கட்டை போடுகிறார்’’ என்று பேட்டியளித்தார். ஆடிப்போன ஹுமாயூன் கபீர், தனது எதிர்ப்பைக் கைவிட்டார்.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்டுவதில் ஆர்வமாக இருந்தார். அவரை சந்தித்த ஏக்நாத் ரானடே, அவரதுஆலோசனைப்படி மண்டபம் கட்டுவதற்குஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் முயற்சியில் ஈடுபட்டார். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனமுவந்து கையெழுத்திட்டனர். விவேகானந்தர் மண்டபம் கட்ட 300-க்கும்மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு கையெழுத்துடன் கூடிய கோரிக்கை மனுவை பிரதமர் நேருவிடம் சமர்ப்பித்தார் ரானடே. இதையடுத்து, பிரதமரின் உத்தரவுப்படி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.
ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ஏக்நாத் ரானடேவின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும்பணி முடிவடைந்து அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரியால் 1970 செப்டம்பர் 2-ம் தேதிதிறந்து வைக்கப்பட்டது. மேலும், 1972-ல்விவேகானந்தரின் போதனைகளைப் பரப்ப‘விவேகானந்த கேந்திரம்’ என்ற ஆன்மிக அமைப்பும் தொடங்கப்பட்டது. இதைத் தொடங்கியவரும் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ஏக்நாத் ரானடே தான். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை இந்த விவேகானந்த கேந்திரமே நிர்வகித்து வருகிறது.
இத்தகைய வரலாறு கொண்ட விவேகானந்தர் நினைவு மண்டபத்தில்தான் பிரதமர் மோடி நேற்று தியானத்தை தொடங்கியுள்ளார். இதில் இன்னொரு அதிசயமான ஒற்றுமை… 1892-ல் அந்தப் பாறையில் 3 நாட்கள் தியானம் செய்த விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திர தத்தா. 132 ஆண்டுகளுக்குப் பின் அதே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி.
அன்று நரேந்திர தத்தா! இன்று நரேந்திர மோடி!