பாலஸ்தீனத்தின் (Palestine) ஹமாஸ் (Hamas) குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் (Israel) மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் குழுவினர் பணயக்கைதிகளாக கடத்திச் சென்றதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு எதிர் தாக்குதல் என்ற பெயரில் அக்டோபர் 8-ம் தேதி அமெரிக்காவின் நிதி மற்றும் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனத்தின் காஸா (Gaza) பகுதியில் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.

ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேலின் இந்த 8 மாத தாக்குதலில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், மனிதாபிமான உதவிகளைச் செய்துவருபவர்கள் என கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 81,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். சமீபத்தில் ஐந்து நாள்களுக்கு முன்பு, பொதுமக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாதுகாப்பு முகாம்கள் நிறைந்த ராஃபாவில் (Rafah) தாக்குதல் நடத்தக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட… இரண்டாவது நாளிலேயே அங்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு, பொதுமக்களில் கிட்டத்தட்ட 45 பேர் பலியாகினர்.
உலகநாடுகள் பலவும் இஸ்ரேலைக் கண்டித்தன. சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கானவர்கள் `All Eyes On Rafah’ என்ற புகைப்படத்தைப் பதிவிட்டுவந்தனர். இதற்கும் எதிராகப் பலர், ஹமாஸ் செய்தது மட்டும் நியாயமா என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இஸ்ரேலும், `அக்டோபர் 7-ம் தேதி உங்கள் கண்கள் எங்கிருந்தது? (Where Were Your Eyes On October 7?)’ என கேள்வியெழுப்பியது.

இதற்கிடையில், ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட, அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டங்களைக் கண்டு, இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதைக் கருத்தில்கொண்டு இஸ்ரேலை போர் நிறுத்துமாறு கூறிவருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் செவிலியராகப் பணியாற்றிவரும் பாலஸ்தீனிய-அமெரிக்க இஸ்லாமிய பெண், இஸ்ரேல் தாக்குதலை இனப்படுகொலை என்று கூறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னதாக, அவர் பணியாற்றும் NYU லாங்கோன் ஹெல்த் மருத்துவமனையானது, கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது குழந்தைகளை இழந்த தாய்மார்களுடன் பணிபுரிந்ததற்காக பிரசவ செவிலியர் ஹெசென் ஜாபருக்கு (Hesen Jabr) மே 7-ம் தேதி விருது வழங்கியது. அந்த நிகழ்ச்சியில், தான் விருது வாங்கியது மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றியது தொடர்பான வீடியோவை சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்திருந்தார்.

அந்த வீடியோவில், `காஸாவில் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் இனப்படுகொலையில், எனது நாட்டைச் சேர்ந்த பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்து வருவது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது” என்று ஹெசென் ஜாபர் பேசியிருக்கிறார்.
அதற்கு எதிர்வினையாக, மருத்துவமனை நிர்வாகம் தற்போது அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து நேற்று பேசிய மருத்துவமனை செய்தித் தொடர்பாளர், “இந்தப் பிரச்னையில் தனது சொந்த கருத்தை பணியிடத்தில் கொண்டுவர வேண்டாம் என ஏற்கெனவே ஒருமுறை எச்சரிக்கப்பட்டது. அப்படியிருந்தும் சமீபத்தில் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியிருக்கிறார். இதனால், ஊழியர்கள் பலர் வருத்தமடைந்தனர். இதன் விளைவாக, இனி அவர் இங்கு செவிலியர் அல்ல” என்றார்.