எதிர்கால சமூக,பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கு செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும்

  • அது தொடர்பில் பல்கலைக்கழக கட்டமைப்புக்கு பெரும் பொறுப்பு உள்ளது.
  • அடுத்த 05 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும்.
  • நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டுமானால், ஏற்றுமதி பொருளாதாரமாக துரிதமாக பரிமாற்ற வேண்டும்.
  • அன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் – ஜனாதிபதி.

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 05 வருடங்களுக்குள் நாட்டின் சகல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழகங்கள் மீது இது குறித்த பரந்த பொறுப்பு சார்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பல்கலைக்கழக கல்வியலாளர்களுடன் நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு, இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கு 2027 – 2040 வரை கால அவகாசம் இருப்பதாகவும், 2035 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான சமூக-பொருளாதார மாற்றத்துக்காக நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் லியுறுத்தினார்.

2035 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்படும் புதிய பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு AI இன் வகிபாகம் முதன்மையாக இருக்க வேண்டுமென் என்பதோடு, நவீன தொழில்நுட்பத்தில் தெற்காசியாவின் அடையாளமாக இலங்கையை மாற்றுவதற்கான இயலுமை காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்கள் பலவற்றின் பேராசிரியர்கள் மற்றும் கல்வியலாளர்களினால் கூட்டாக தயாரிக்கப்பட்ட பிரேரணையும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பல பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே AI தொழில்நுட்பத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய கல்வியலாளர்கள், அந்த திட்டங்களின் செயல்பாடு மற்றும் இலக்குகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,

“இலங்கை தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைய வேண்டும். நவீன தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். பொருளாதார நன்மைகளை அடைய தொழில்நுட்ப அறிவு போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை. அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிலும் நாம் பின்தங்கியிருக்க முடியாது.

நாம் செயற்கை நுண்ணறிவுடன் முன்னேறினால், மற்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவுக்குள் பல தொழில்நுட்பங்கள் உள்ளடங்கியுள்ளன. அதனை நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்தே ஒரு நாடு என்ற வகையில் முன்னேற்றத்தை அடையலாம். முன்பு நாம் தகவல் தொழில்நுட்பத் துறையில் செய்த தவறை மீண்டும் செய்ய முடியாது.

தகவல் தொழில்நுட்பத் துறை திட்டங்களில் பயன்படுத்துவது குறித்து மாத்திரமே இதுவரையில் கவனம் செலுத்தியிருக்கிறோம். அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அதன் பலனாகவே தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு சில நாடுகளை விடவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம்.

1984 ஆம் ஆண்டு நான் நாட்டில் கணினிக் கல்வியைத் அறிமுகப்படுத்தியபோது ​​சின்க்கிளேயார் கணினிகளை அறிமுகப்படுத்தியிருந்தோம். அதனை நாங்கள் சரியாக செய்யவில்லை. அதற்காக நீண்ட காலத்தை செலவிட்டோம். அந்த அனுபவங்களை பாடமாக கொள்ள வேண்டும்.

அதன்படி, நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான செயற்பாடுகளை தொழில்நுட்ப அமைச்சு முன்னெடுத்து வருகிறது. டிஜிட்டல் மாற்றத்துக்கான முகவர் நிறுவனத்தை நிறுவது தொடர்பிலும் ஆலோசிக்கிறோம். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சமூக , பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும்.

பொருளாதார ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விடயத்தில் முன் நின்று செயற்படும். அத்தோடு டிஜிட்டல் மாற்றத்துக்கான முகவர் நிறுவனமும் ஸ்தாபிக்கப்படும். இதற்குள் தேசிய செயற்கை நுண்ணறிவு மையம் என்ற சுயாதீன நிறுவனமும் ஸ்தாபிக்கப்படும். அதற்கான பணிப்பாளரும் பணிப்பாளர் சபையொன்றும் நியமிக்கப்படும்.

இந்த நிறுவனங்களை நிறுவுவதற்கான சட்ட வரைவு உருவாக்கப்படுகிறது. அதற்கு மேலதிகமாக தொழில்நுட்ப மேம்பாட்டு சபையும் காணப்படுகிறது. அதேபோல் வணிக ஆராய்ச்சியை ஊக்குவிக்க நிதியளிப்போம். நாம் செய்யும் முதலீடுகளில் இலாபம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். நாம் வெற்றியடைவதற்கான ஒரே வழியாக இதனை மட்டுமே சொல்ல முடியும்.

இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதும், அதில் பெரும் பகுதி பயன்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் அடுத்த ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்வோம்.

இத்திட்டத்தில் முடிந்த அளவில் தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம்.

செயற்கை நுண்ணறிவை (AI)விரிவுபடுத்த பாடசாலைகளுக்குள் AI சங்கங்களைத்(AI Societies) தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். மேலும், பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும். முக்கியமாக தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு 4 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம். பொறியியல் பீடங்கள் இல்லாத பல்கலைக்கழகங்களில் பொறியியல் பீடங்களைத் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அடுத்த 05 ஆண்டுகளில் அதிகபட்சமாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதே எமது இலக்காகும். இத்திட்டம் அடுத்த ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும். இறக்குமதியைச் சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி பொருளாதாரமாக நாம் மாறவும் இது மிக அவசியமானதாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. தற்போதுள்ள கடனை செலுத்த 2027 – 2040 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, 2035க்குள் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு அதற்குள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அதனால்தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிக்கிறோம். இந்த பொருளாதார வளர்ச்சி இலக்கை அடையாவிட்டால், நமது நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் பரவியுள்ளது. தெற்காசியாவில் ஒரு தனித்துவமான அடையாளத்தை நாம் பதிப்பதற்கு அந்த தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கும் இது பயனளிக்கும். செயற்கை நுண்ணறிவுக்கும் பௌத்த தர்மத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்த தேசிய தொலைக்காட்சியின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்கவும் இதன்போது உரையாற்றினார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்வியலாளர்கள், இளைஞர் விவகாரம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.