ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரையை தமிழக உள்துறை செயலாளர் அமுதா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவு காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு புதிய வேலையைத் தேடிக்கொண்டிருந்தார். அதன் பிறகு கடந்த 1997-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் எஸ்.ஐ-யாக முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்தார். அதன் பிறகு, திருச்சி பாலக்கரை காவல் நிலையத்துக்கு இடமாறுதலானார். அப்போது, பிரபல ரௌடி ஒருவரின் கூட்டாளியான பிரபல ரௌடியான கோ.சி.ஜான் என்பவர், வெள்ளத்துரை டீமின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். இதையடுத்து சென்னைக்கு வெள்ளத்துரை இடமாற்றம் செய்யப்பட்டார். இதுதான் வெள்ளத்துரையின் முதல் என்கவுன்ட்டர் என்று சொல்லலாம்.
அதன் பிறகு கடந்த 2003-ம் ஆண்டு சென்னையில் கோலோச்சிய அயோத்திகுப்பம் வீரமணியைப் பிடிக்க வெள்ளத்துரையின் டீம் சென்றது. அப்போது வீரமணி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது, ரௌடிகள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையில் வெள்ளத்துரை சேர்க்கப்பட்டார். இதையடுத்து வீரப்பனும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அதனால் எஸ்.ஐ-யாக இருந்த வெள்ளத்துரைக்கு டபுள் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதனால் டி.எஸ்.பி-யான வெள்ளத்துரை மதுரைக்கு இடமாற்றப்பட்டார். அப்போது வெள்ளத்துரையின் டீம் கடந்த 2010-ம் ஆண்டு டபுள் என்கவுன்ட்டரை நடத்தியது. அதன்பிறகு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ ஆல்வின் சுதன் என்பவர் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ரௌடிகள் அடுத்தடுத்து என்கவுன்ட்டரிலும் விசாரணைக்கு அழைத்து வந்தபோதிலும் உயிரிழந்தனர். இந்த வழக்குதான் வெள்ளத்துரைக்கு சிக்கலை ஏற்படுத்தி, அவரை சஸ்பெண்ட் செய்ய வைத்திருக்கிறது.
இது குறித்து டி.ஜி.பி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். “சஸ்பெண்ட் செய்யப்பட்ட வெள்ளத்துரை தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் ஏ.டி.எஸ்.பி-யாக பணியாற்றி வந்தார். இவர் சென்னை புறநகர் பகுதியில் ரௌடிகளைக் கட்டுப்படுத்தும் சிறப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். இந்தச் சூழலில் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை இன்று 31.5.2024-ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற இருந்தார். ஆனால் 30.5.2024-ம் தேதி உள்துறைச் செயலாளர் அமுதா, அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். அதற்கு ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரையின் மீது நிலுவையிலிருந்த குற்றச்சாட்டு காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது.
வெள்ளத்துரை தன்னுடைய சர்வீஸில் 12 என்கவுன்ட்டர்கள் செய்திருக்கிறார். இது தவிர ஒரு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றதோடு வீர தீர செயல்களை புரிந்ததற்காக விருதும் வாங்கியிருக்கிறார். ரௌடிகள், குற்றம் செய்பவர்கள் மத்தியில் வெள்ளத்துரை மீது இன்று வரை ஒரு பயம் இருந்தது. அதே நேரத்தில் அவர் செய்த என்கவுன்ட்டர்கள் தொடர்பான மனித உரிமை விசாரணையிலும் ஆஜராகி அதற்கு விளக்கம் அளித்து வந்தார். இந்தச் சமயத்தில்தான் போலீஸ் எஸ்.ஐ ஆல்வின் சுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கொக்கி குமார் என்பவரை போலீஸார் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டதாக கொக்கி குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். அது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த ரிப்போர்ட்டையும் தாக்கல் செய்திருந்தனர். இந்தச் சூழலில்தான் அந்த வழக்கை காரணம் காட்டி ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை, ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்” என்றனர்.
உள்துறை வட்டாரத்தில் கேட்டபோது பேசியவர்கள், “ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவர் மீது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அதில் குறிப்பாக கொக்கி குமார் உயிரிழப்பு வழக்கு ஒன்றாகும். இதுதவிர அவர் தலைமையிலான டீம் செய்த என்கவுன்ட்டர் சம்பவங்களிலும் அவர் பணியாற்றிய இடங்களிலும் வெள்ளத்துரை மீது சில குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உள்ளன. அதனடிப்படையில் விசாரணை நடந்து வருவதால்தான், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது” என்றனர்.
வெள்ளத்துரை தரப்பில் பேசியவர்கள், “இந்த சஸ்பெண்ட் ஆர்டரின் பின்னணியில் ஒரு பெரிய சதி உள்ளது. அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என்றனர்.