கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று இரவு தொடங்கினார். வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு கன்னியாகுமரியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணிநேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார்.

இதற்காக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு நேற்றுமாலை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 5.08 மணிக்கு வந்தார். மாலை 5.40 மணி அளவில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சென்றார். அவருக்கு, பகவதியம்மனின் திருவுருவப் படத்தை, கோயில் மேலாளர் ஆனந்த் வழங்கிவரவேற்றார். கோயில் கொடிமரத்தை சுற்றி வணங்கிய பிரதமர்,சந்நிதிக்கு சென்று அம்மனை வழிபட்டார். கோயில் போற்றிகள்விட்டல், பத்மநாபன் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி பிரதமருக்கு பிரசாதம் வழங்கினர். பிரகார வலம் வந்து, அங்குள்ள இந்திரகாந்த விநாயகர் சந்நிதியிலும் பிரதமர் வழிபட்டார்.

அங்கிருந்து மாலை 6 மணிக்கு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் ‘விவேகானந்தர்’ என்ற படகில் பயணித்து, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார். அப்போது, பிரதமரின் படகைச் சுற்றிலும் வளையம்போல பாதுகாப்பு படையினர் தனிப்படகுகளில் வந்தனர்.

மாலை 6.15 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு சென்ற பிரதமர், தியான மண்டபத்தில் உள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி ஆகியோரது சந்நிதிகளிலும், சுவாமி விவேகானந்தரின் முழுஉருவ வெண்கல சிலைக்கும் மலர்தூவி வணங்கினார். இரவு 7 மணிக்கு அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.

தொடர்ந்து 5 மணி நேரம் தியானம், அதன் பிறகு சிறிது ஓய்வு என நாளை மாலை வரை 45 மணி நேரத்துக்கு தொடர் தியானத்தை பிரதமர் மேற்கொள்கிறார். 5 மணி நேரத்துக்கு ஒருமுறை எடுக்கும் ஓய்வைத் தவிர, பிரதமர் தூங்கப் போவதில்லை. ஓய்வு சமயத்தில் இளநீர், பழச்சாறு மட்டும் அருந்துகிறார்.

நாளை (1-ம் தேதி) மாலை 4 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் கடல், வான் மற்றும் தரைவழியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலில் உள்ள விவேகானந்தர் பாறையின் 3 கி.மீ. சுற்றளவுக்கு படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், இந்தப் பாறைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மெரைன் போலீஸாரும், கமாண்டோ நீச்சல் வீரர்களும் இரவும், பகலும் ரப்பர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, இந்திய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, குமரியில் பிரதமரை வரவேற்க, பாஜக மத்திய, மாநில நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோருக்கு குமரியில் உள்ள விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், பாஜக தலைமை அலுவலக அறிவுறுத்தலை தொடர்ந்து, இவர்களது கன்னியாகுமரி வருகை ரத்து செய்யப்பட்டது. முன்னாள் மத்தியஇணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சுற்றுலா மாளிகைக்கு பிரதமரை சந்திக்க வந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரையும் அனுமதிக்கவில்லை. சுற்றுலா பயணிகள், இந்து அமைப்பினர் சிலர் பிரதமரை வரவேற்று கோஷம் எழுப்பினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.