கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் காவி உடையில் பிரதமர் மோடி தியானம் – புகைப்படங்கள் வெளியீடு

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று (வியாழன்) இரவு தொடங்கிய நிலையில் இன்று (மே.31) இரண்டாவது நாளாக அவர் தியானத்தைத் தொடர்ந்து வருகிறார். விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து அவர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். தியானப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.

2019 தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி கேதார்நாத் குகையில் இதேபோன்ற தியானப் பயிற்சியில் ஈடுபட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

திடீர் அனுமதி: இதற்கிடையில், விவேகானந்தா பாறைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு திடீர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும் விவேகனந்தா பாறைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய செல்போன், உடைமைகள் ஏதும் எடுத்துச் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. அதேபோல், அங்கு வருபவர்களின் ஆதார் விவரம் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் முதல் தளத்துக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

விவேகானந்தர் தியானம் செய்த பாறையில்.. மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணிநேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார்.

நாளை (1-ம் தேதி) மாலை 4 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்.

ராகுல் காந்தி விமர்சனம்: இந்நிலையில், பிரதமர் மோடி நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்கும்படி தான் விடுத்த அழைப்பை ஏற்காமல் தியானம் செய்வதற்காக கன்னியாகுமரி சென்றுவிட்டதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.