சிறந்த வில்லனுக்கான விருது!
“விகடன் எப்பவுமே ஸ்பெஷல்தான். இன்னைக்கு விகடன்ல என்ன விமர்சனம் சொல்லப்போறாங்கன்னு எல்லாரும் காத்திருக்காங்க. அப்படிப்பட்ட விகடன்ல விருது வாங்குறது பெருமை.’’ – இயக்குநர் ராதா மோகன்
சிறந்த வில்லனுக்கான விருதை இயக்குநர் ராதா மோகன் வழங்க ‘பார்க்கிங்’ திரைப்படத்துக்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பெற்றுக்கொண்டார்.
“எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கொடுக்கறது, எனக்கு நானே விருது கொடுத்துக்கறது மாதிரி இருக்கு. அவரை முதல்ல நானும் காமெடியனாகத்தான் பார்த்தேன். அதுக்குப் பிறகுதான் அவருக்குள்ள இருக்குற நடிகர் பத்தி தெரிஞ்சுது. அவரை, `நடிப்பு மிருகம்’னுதான் சொல்லணும்.’’ – இயக்குநர் ராதா மோகன்.
சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது!
சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ஒளிப்பதிவாளர் திரு வழங்க, ‘விடுதலை – 1’ படத்துக்காக ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பெற்றுக்கொண்டார்.
“ஒட்டுமொத்த `விடுதலை’ படக்குழுவுக்கும் நன்றி. இது எல்லோருக்குமான விருது. ஒளிப்பதிவாளர் திரு சாரிடம் எட்டு ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். என்னை ஒளிப்பதிவாளராக உருவாக்க, அவர் நிறையவே சிரமப்பட்டார். அதற்காக நான் என்றைக்குமே அவருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.’’ – ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
சிறந்த நடன இயக்குநருக்கான விருது!
சிறந்த நடன இயக்குநருக்கான விருதை இயக்குநர் சரண் வழங்க, ‘மாவீரன்’ திரைப்படத்தின் ‘சீனா சீனா ‘ பாடலுக்காக, நடன இயக்குநர் ஷோபி பெற்றுக்கொண்டார்.
“இது என்னோட நான்காவது ஆனந்த விகடன் விருது. இந்த விருதைக் கொடுக்கறதுக்கு முன்னாடி ஒரு ரைட்அப் எழுதுவாங்க. அதைப் பார்க்கும்போது ரொம்ப திருப்தியாக, நிறைவா இருக்கும். சரண் சாரோட முதல் திரைப்படமான ‘வசூல் ராஜா’ திரைப்படத்துலதான் நான் நடன இயக்குநராக அறிமுகமானேன். இந்த விருது எனக்கு மட்டுமில்ல… என்னுடைய குழுவுக்கும்தான்.’’
– நடன இயக்குநர் ஷோபி
விருது விழாவை தொகுத்து வழங்கும் ஃபேவரைட் ஆங்கர்கள்!
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவை மக்களின் ஃபேவரைட் ஆங்கர்களான அர்ச்சனா, மிர்ச்சி விஜய் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்தியாவே வியக்கும் வகையில் விழா…
”விகடனின் நூற்றாண்டு விழாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். இந்தியாவே வியக்கும் வகையில் அந்த விழா நடக்க வேண்டும். திரையுலகம் விகடனைத் தோளில் சுமந்து சிறப்பிக்க வேண்டும்.” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு
சிறந்த தயாரிப்புக்கான விருதை கலைப்புலி எஸ்.தாணு வழங்க ‘அயோத்தி’ படத்துக்காக ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பெற்றுக்கொண்டார்.
“ `அயோத்தி’ படத்துக்காக நாங்கள் வாங்கும் 11-வது விருது இது. நூற்றாண்டு காணும் விகடனிலிருந்து விருதைப் பெறுவது எங்களுக்குப் பெரிய கௌரவம்.’’ – – `ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன்!
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா 2023 கோலாகலமாகத் தொடங்கியது!
2023-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. விருது பெறவும், விருது வழங்கவும் திரை நட்சத்திரங்கள் விழாவுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.