சென்னை: நில அபகரிப்பாளர்களுக்கு உடந்தையாக இருப்பதாக புகார் அளித்த நபரிடம், புகாரைத் திரும்பப் பெறும்படி மிரட்டல் விடுத்த வாணியம்பாடி வட்டாட்சியர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் உள்ள அதனவூரைச் சேர்ந்த குமரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அதனவூர் கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்துக்கான தனிப்பட்டாவில், கோவிந்தராஜ் என்பவரின் பெயரை சேர்த்துள்ள திருப்பத்தூர் வட்டாட்சியராக பணிபுரிந்த சிவப்பிரகாசம், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ரூ. 20 லட்சத்தை லஞ்சமாக கேட்டார். இந்த பிரச்சினை தொடர்பாக வட்டாட்சியர் சிவப்பிரகாசத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வட்டாட்சியர் மீதான புகாரை 12 வாரங்களில் விசாரித்து முடிவெடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் அந்த புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் புகாரை திரும்பப்பெறும்படி கூலிப்படையினரை வைத்து தற்போது வாணியம்பாடியில் வட்டாட்சியராக பணிபுரியும் சிவப்பிரகாசம் என்னை மிரட்டி வருகிறார்.
இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீஸில் புகார் அளித்தும் அந்த வட்டாட்சியர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது புகாரை முறையாக விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர், “சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் சிவப்பிரகாசத்துக்கு எதிரான புகார் மீது 3 வாரங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜோலார்பேட்டை போலீஸாருக்கு உத்தரவிட்டார்.