புதுச்சேரி: புதுச்சேரியில் பழமையான சிவன் கோயிலுக்கு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 108 சிதறு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தார். அங்கு அவர் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டுப் புறப்பட்டார்.
புதுச்சேரி மாநிலம் பாகூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதா அம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் திருக்கோயில் உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று (வெள்ளிக்கிழமை) இந்தக் கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்தார்.
இந்தக் கோயிலின் புராதனம் குறித்து அண்ணாமலைக்கு விளக்கிய ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர், ‘புதுச்சேரிக்கு 20 கி.மீ தொலைவில் கடலூர் செல்லும் சாலையில் உள்ள பாகூரின் மையப்பகுதியில் இந்த ஸ்ரீ மூலநாத சுவாமி திருக்கோயில் சோழ மன்னர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது. பண்டைய கால கல்வெட்டுகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன.
குறிப்பாக, 10-ம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சி புரிந்த ராஷ்டிரகூட மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. சோழ மன்னர்களை போரில் தோற்கடித்த ராஷ்டிரகூட மன்னர் கிருஷ்ணா காலத்தில் நடந்த நிகழ்வுகள் கோயில் கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டுள்ளன. சோழர்கள் கால கல்வெட்டுகள் ஆதித்திய சோழன் காலத்தில் செதுக்கப்பட்டவை.இந்தக் கோயில் தற்போது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோயிலில் மேற்கொள்ளப்படும் பூஜைகள், புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நடைபெறுகின்றன,’ என்றனர். இந்தக் கோயிலில் உள்ள மூலநாதர், கணபதி, முருகன், நவக்கிரகங்கள், துர்க்கை, பைரவர், பொங்கு சனி பகவான், சண்டீஸ்வரர் உட்பட தெய்வங்களை பற்றியும் அண்ணாமலைக்கு அவர்கள் எடுத்துக்கூறினர்.
பின்னர், பாலா விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனை காட்டப்பட்டது. அப்போது 108 சிதறு தேங்காய் உடைத்து அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து சாமி தரிசனம் செய்த அவர், அதன்பிறகு வேதாம்பிகை சன்னிதியில் சிறிது நேரம் தியானம் செய்த பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.