ஒரு கார் 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து விற்பனையில் இருப்பது என்பது ஒரு பெரிய சாதனை. அந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது மாருதி ஸ்விஃப்ட். அதிலும் புதிய ஸ்விஃப்ட் விற்பனைக்கு வரப்போகிறது என்ற நிலையில்கூட, கடந்த ஏப்ரல் மாதம் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையானது. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்விஃப்ட், மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட்டாக விற்பனைக்கு வந்திருக்கிறது.
புதிய இன்ஜின், புதிய அம்சங்கள், தரம் உயர்த்தப்பட்ட கேபின், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றோடு அறிமுகமாகியிருக்கும் ஸ்விஃப்ட்டின் துருப்புச் சீட்டாக இருக்கப் போவது அதன் மைலேஜ். ஸ்விஃப்ட்டின் டிசைனும், ஸ்டைலும் மாற்ற முடியாத அளவுக்கு வாடிக்கையாளர்களின் நெஞ்சத்துக்கு நெருக்கமாகி விட்டன. அதனால் இந்த அடிப்படை அடையாளங்களில் மாருதி எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால், மேம்படுத்தி இருக்கிறது. ஸ்விஃப்ட் இதுவரை எந்த ப்ளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்பட்டதோ, அதே Heartect ப்ளாட்ஃபார்மில் இப்போதும் உற்பத்தியாகிறது. இதன் வீல்பேஸ் அதே 2,450மிமீ அளவுக்குத்தான் இப்போதும் இருக்கிறது. ஆனால் எடை மட்டும் சுமார் 25 கிலோ கூடியிருக்கிறது. காரணம், கூடுதலாகச் சேர்ந்திருக்கும் காற்றுப்பைகள்.
காருக்கு முகம் போல இருப்பது இதன் முகப்பு. இதற்கு மட்டும் வேறுவிதமான மேக்கப் போட்டிருக்கிறது மாருதி. ஆம், இதன் LED ஹெட்லாம்ப்ஸின் ஹவுசிங் இப்போது கருப்பு வண்ணத்திற்கு மாறியிருக்கிறது. அதேபோலவே கிரில்லின் குறுக்கே இருந்த க்ரோம் பட்டைக்குப் பதிலாக மொத்த கிரில்லும் கவர்ச்சியான கருப்பு வண்ணத்தில் இருக்கின்றன. கிரில் மீது இடம்பெற்றிருந்த இதன் லோகோ, இப்போது போனட்டுக்கு இடம் மாறியிருக்கிறது. போனட்டும் கடல் சிப்பி ஓட்டின் வடிவில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.
பக்கவாட்டுத் தோற்றம் மாறவில்லை. ஆனால் ஷோல்டர் லைன் பார்ப்பதற்கு இப்போது மேலும் எடுப்பாக இருக்கிறது. C பில்லரில் இருந்த பின்னிருக்கைகளின் கைப்பிடி, வழக்கமாக இருக்க வேண்டிய இடத்திற்கு இப்போது திரும்ப வந்துவிட்டது. காரின் பில்லர்கள் மற்றும் கூரை என அனைத்துக்கும் கருப்பு வண்ணத்தில் இருப்பது காருக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் லுக்கைக் கொடுக்கிறது. 15 இன்ச் (விலை குறைவான மாடல்கள் என்றால் 14 இன்ச்) அலாய் வீல் டிசைன் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
பின்பக்க LED டெயில் லைட்ஸ் டிசைனும் C வடிவத்திற்கு மாறியிருக்கிறது. டெயில் கேட் இரண்டு டெய்ல் லைட்ஸுக்கும் நடுவே திறந்து மூடுகிறது.
உள்ளலங்காரம்
காரின் டேஷ்போர்டு பெலினோவை நினைவுபடுத்துகிறது. ஸ்போர்ட்டியான லுக் வேண்டும் என்பதற்காக காரின் டேஷ்போர்டு, சீட் என எல்லாமே கருப்பு வண்ணத்துக்கு மாறியிருக்கிறது. 9.0 இன்ச் அளவுக்கு டச் ஸ்கிரீன் இப்போது வளர்ந்திருக்கிறது. இது இப்போது ஃப்ளோட்டிங் ஸ்க்ரீனாகவும் மாறியிருக்கிறது. அதனால் ஏசி திருகுகள் எல்லாம் இடம் மாறியிருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இப்போது வண்ணமயமாகி இருக்கிறது. இதில் டச் ஸ்க்ரீனில் தெரியும் நேவிகேஷன் மிரர் ஆகிறது. திருகுகள் பட்டன்கள் என்று பல விஷயங்கள் பெலினோ மற்றும் ஃப்ரான்க்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களில் இருந்து வந்திருக்கின்றன. ஸ்டீயரிங் வீலில் பியானோ ஃபினிஷ் சேர்த்திருப்பது நல்ல ரசனை.
C பில்லரில் இருந்த கைப்பிடி அங்கிருந்து இடம் மாறியிருப்பதால், அந்த இடத்தில் புதிய குவாட்டர் கிளாஸ்கள் வந்து விட்டன. அதனால் காரின் இரண்டாவது வரிசை சீட்டுகள் சற்றுத் தாராளமாகியிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
சிறிய பயணங்கள் என்றால் பின் சீட்டில் மூன்று பேர் பயணிக்க முடியும். நீண்ட பயணங்கள் என்றால் இரண்டு பேர் பயணிப்பதுதான் வசதியாக இருக்கும்.பின்னிருக்கைப் பயணிகளுக்காகத் தனி ஏசி வெண்ட் உண்டு. டிக்கியில் 265 லிட்டர் அளவுக்குப் பொருட்களை வைக்க முடிகிறது. பெட்டி படுக்கைகளுக்கு மேலும் அதிக இடம் தேவைப்பட்டால், பின்னிருக்கைகளை 40:60 என்கிற விகிதத்தில் மடித்துக் கொள்ளலாம்.
புதிய அம்சங்கள்
வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை இருக்கின்றன. க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ரிவர்ஸ் கேமரா ஆகியவை உண்டு.
பாதுகாப்பு
6 காற்றுப்பைகள், ABS, EBD, ஹில் ஹோல்டு அசிஸ்ட் 3 பாயின்ட் சீட் பெல்ட் ஆகிய பாதுகாப்பு வசதிகளை விலை குறைந்த வேரியன்ட்டுகளுக்குக்கூடக் கொடுத்திருக்கிறார்கள். 2022-ம் ஆண்டு வெளிவந்த GNCAP டெஸ்டில் ஸ்விஃப்ட் ஒரு நட்சத்திரம்தான் வாங்கியிருந்தது. இப்போது பாரத் NCAPல் அது என்ன ரேட்டிங் பெறுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்
4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் K சீரிஸ் இன்ஜின் இருந்த இடத்தில், இப்போது 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் Z சீரிஸ் இன்ஜினைப் பொருத்தியிருக்கிறார்கள். இது பழைய இன்ஜினோடு ஒப்பிடும்போது, ARAI அளவுகோலின்படி 3 கிமீ அளவுக்குக் கூடுதல் மைலேஜ் கொடுக்கிறது. அதாவது, AMT கியர்பாக்ஸ் கொண்ட ஸ்விஃப்ட்டாக இருந்தால், 25.75 கி.மீட்டரும், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஸ்விஃப்ட்டாக இருந்தால் 24.8 கி.மீட்டர் மைலேஜும் கொடுக்கிறது.
மூன்று சிலிண்டர்கள் கொண்ட இன்ஜினுக்கு இதில் இருந்து வரும் சத்தம் குறைவுதான் என்றாலும், கார் ஐடிலிங்கில் இருக்கும்போது லேசான அதிர்வுகளை உணர முடிகிறது. AMT காரில், சக்தி வேண்டும் என்றால் லீனியராகத்தான் கிடைக்கும். உடனடியாக பவர் வேண்டும் என்று ஆக்ஸிலேட்டர் பெடலை ஒரேயடியாக அழுத்தினால் இன்ஜின் சிரமப்படுகிறது. வேகமாகப் போக வேண்டும் என்று தொடர்ந்து ஆக்ஸிலேட்டரைத் தொடர்ச்சியாக அழுத்தினால், சட் சட் என்று உடனுக்கு உடன் கியர் மாறுவதை உணர முடிகிறது. AMT காரை மேனுவலாக ஓட்ட வேண்டும் என்பதற்காக டிப்ட்ரானிக் வசதியும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த ஸ்விஃப்ட்டிற்கு நிச்சயமாக ஒரு நல்ல ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேண்டும்.
இந்த செக்மென்ட்டில் இருக்கும் எந்தக் காரோடு ஒப்பிட்டாலும், இதன் 5 கியர்களை கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ்தான் முதலிடத்தைப் பிடிக்கும். ஆம், இது அந்த அளவுக்கு ஸ்மூத்தாக ஒரு கியரில் இருந்து இன்னொரு கியருக்கு மாறுகிறது.
ஹேண்ட்லிங் மற்றும் சஸ்பென்ஷன்
ஸ்டீயரிங் நிச்சயமாக மேம்பட்டிருக்கிறது. சற்றே லைட்டாக இருந்தாலும், சிட்டியில் ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்கிறது. ஸ்டீயரிங்கை வளைத்து வளைத்து ஓட்டினாலும், அது சட் சட்டென்று ரிட்டனாகிவிடுகிறது ஓட்டுவதற்கு இன்னும் எளிதாக இருக்கிறது. பாடி ரோல் இல்லை. சஸ்பென்ஷன் என்று பார்த்தால், பின்னிருக்கைகளை விட முன்னிருக்கைகளில் அதிர்வுகள் குறைவாகத் தெரிகின்றன.
மோட்டார் விகடன் தீர்ப்பு
ஸ்விஃப்ட்டின் விலை, மாருதி பெலினோவின் விலையோடு ஒப்பிடும் அளவுக்கு இருக்கிறது. போட்டி காரான ஹூண்டாய் கிராண்ட் i10 ஐ விட அதிகமாகவும் இருக்கிறது. இருந்தாலும், ஸ்விஃப்ட்டின் வெளிப்புறத் தோற்றத்தில் கூடுதலாக ஸ்போர்ட்டினெஸ் தெரிகிறது. ஏற்கெனவே விற்பனையில் இருந்த 4 சிலிண்டர்கள் கொண்ட இன்ஜின் அளவுக்கு இந்த 3 சிலிண்டர் இன்ஜின் பெப்பியாக இல்லை. ஆனால், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட மேனுவல் ஸ்விஃப்ட்டின் டிரைவிங் மேனர்ஸில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இவை அனைத்தையும் விட வாங்கினால் ஸ்விஃப்ட்தான் வாங்குவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவை ஸ்விஃப்ட்டுக்கு எந்த அளவுக்குச் சாதகமாக இருக்கும் என்பது வாடிக்கையாளர்கள் கைகளில் இருக்கிறது.