சென்னை: சட்ட விதிகளை மீறி, பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று மத்திய அரசிடம் வழிகாட்டுதல்களை தமிழக அரசு கேட்டுள்ளது.
பிரபல யூடியூபர் இர்ஃபான் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மனைவி கர்ப்பமாக இருந்ததால், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ள துபாய் சென்று அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை இர்ஃபான் வெளியிட்டார்.
இந்தியாவில் கருவில் இருக்கும் பாலினத்தை அறிவதும், அறிவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இர்ஃபான் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்தது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை இர்ஃபான் நீக்கினார். கடந்த 21-ம் தேதி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) இளங்கோ மகேஷ்வரன், பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினார். அப்போது, “நான் செய்தது தவறு. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று இர்ஃபான் மன்னிப்புக் கடிதம் வழங்கினார். மன்னிப்புக் கடிதம் திருப்திகரமாக இருந்ததால், அந்தக் கடிதம் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) இளங்கோ மகேஷ்வரனிடம் கேட்டபோது, “இந்த விவகாரம் இந்தியாவில் நடக்கவில்லை. துபாயில் நடந்துள்ளது. இந்த விவகாரம் புதிதாக இருப்பதால், என்ன செய்யலாம் என்று வழிக்காட்டுதல்கள் வழங்கக் கோரி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியாவில் இருந்து யாராவது வந்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிந்துகொள்ள பரிசோதனை செய்ய வந்தால், பரிசோதனை செய்யக்கூடாது என்று மற்ற நாடுகளுக்கும் அறிவுறுத்துமாறும் சொல்லியிருக்கிறோம்” என்றார்.