புதுடெல்லி,
சர்வதேச விமானங்கள் புறப்படுவதில் தாமதம் மற்றும் பயணிகளை உரிய முறையில் கவனிக்கத் தவறியது ஆகிய காரணங்கள் தொடர்பாக ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து கண்காணிப்பு ஆணையமான டி.ஜி.சி.ஏ. இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் கடந்த 24-ந்தேதி மும்பையில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்ற ஏ.ஐ.179 விமானம் மற்றும் 30-ந்தேதி டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்ற ஏ.ஐ.183 விமானம் ஆகிய இரண்டு சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டது மட்டுமின்றி, விமானத்தில் போதுமான குளிரூட்டும் வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதியடைந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் ‘ஏர் இந்தியா’ விமானங்களில் பயணித்த பயணிகள் பலர் அசவுகரியத்திற்கு உள்ளான சம்பவங்கள் குறித்த புகார்களும் டி.ஜி.சி.ஏ.வின் கவனத்திற்கு வந்துள்ளதாக நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளை சரியான முறையில் கவனிப்பதில் ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது என்றும், விமானங்கள் புறப்படுவதில் தாமதம், விமானங்கள் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட சமயங்களில் பயணிகளுக்கு வழங்கவேண்டிய நிவாரணங்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு ‘ஏர் இந்தியா’ நிறுவனம் முறையாக வழங்கவில்லை என்றும் டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்திற்கு எதிராக ஏன் அமலாக்க நடவடிக்கை தொடங்கப்படக்கூடாது? என்பதற்கான காரணத்தைக் விளக்குமாறு டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.