வங்கி கணக்குகள் வாடகைக்கு விடப்படுவதாகவும், அதன் மூலம் முறைகேடான பணப்பரிவர்த்தனைகள் நடப்பதாகவும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில், காவல்துறை விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை வளையத்தில் பீகாரின் நவாடாவைச் சேர்ந்த கிருஷ்ணா முராரி என்பவர் சிக்கினார். டெலிகிராம் பக்கத்தில் ஒரு கணக்கைத் தொடங்கி, அதில் `வங்கிக் கணக்குகள் வாடகைக்கு வேண்டும்’ எனக் கேட்டிருக்கிறார்.
இதில் பல்வேறு நபர்கள் வங்கிக் கணக்கை வாடகைக்கு தர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இதில், வர்த்தகம், சம்பளக் கணக்காக இருந்தால் 20,000 ரூபாயும், சேமிப்புக் கணக்கு என்றால் 3,000 ரூபாயும் வாடகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர ஒவ்வொரு முறை, அந்தக் கணக்குக்குப் பணம் டெபாசிட் செய்யும் போது, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதை நம்பி பலர் தங்கள் வங்கிக் கணக்குகளை இந்தக் கும்பலுக்கு வாடகைக்கு விட்டிருக்கின்றனர். ஆனால், மோசடி செய்வதே இந்தக் கும்பலின் நோக்கம் என்கிறார்கள் போலீசார். இந்த முறையில், அந்த வங்கிக் கணக்குகள் மூலமாக சுமார் ரூ.50 லட்சம் பரிவர்த்தனை மோசடியாகச் செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு சீனாவைச் சேர்ந்தவர் உட்பட இதுவரை 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், இந்தக் கும்பலிடமிருந்து 19 மொபைல் போன்கள், வெளிநாடுகளில் செயல்பாட்டில் இருந்த சிம்கார்டுகள் உட்பட 223 சிம்கார்டுகள், இரண்டு மடிக்கணினிகள், 7 ஆதார் அட்டைகள் மற்றும் ரூ.23,110 ரொக்கம் ஆகியவற்றை காவல்துறை கைப்பற்றியிருக்கிறது.
சீன நாட்டைச் சேர்ந்தவர் தொடர்பாக சீன தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவை உருவாக்கி வழி நடத்தியது கிருஷ்ணா முராரி என்பதும், கொரோனா பெருந்தொற்று சமயத்திலிருந்து இது தொடர்ந்து நடந்து வருவதும் தெரியவந்திருக்கிறது. இந்த வங்கிப் பரிவர்த்தனை மூலம், ஏதேனும் அசம்பாவிதத்துக்கு திட்டமிடப்பட்டிருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.