மூன்றாவது முறை பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்துவிட்டு களமிறங்கியது பா.ஜ.க. பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முடிவோடு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியோடு காங்கிரஸை பா.ஜ.க விமர்சித்து வந்தது. இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியா கூட்டணியாக இணைந்து போராடுவது என்று முடிவு செய்தோம். கூட்டணி வெற்றி பெற்ற பிறகு யார் பிரதமர் என்பதை ஆலோசித்து கூட்டணி முடிவு செய்யும்.
என்னிடம் கேட்டால் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தேர்வு செய்வேன். ஏனென்றால், தேர்தலுக்கு முன் இரண்டு ‘பாரத் ஜோடோ யாத்ரா’க்களை வழிநடத்தியவர். அப்போது விரிவான பிரசாரம் மேற்கொண்டு, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மேடைகளைப் பகிர்ந்துகொண்டு நெருக்கமாக இருந்தவர். மோடியை நேரடியாக எதிர்த்து தாக்கியவர். மேலும், அவர் நாட்டின் இளைஞர்களையும், நாட்டின் நீள அகலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே அவரை தேர்வு செய்யலாம் என்பது என்னுடைய விருப்பம்.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் கூட்டணியின் ஆலோசனையின் போது என் பெயரை முன்மொழிந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், 2004, 2009 போன்ற தேர்தல் முடிவுகளின்படி ஆலோசிக்கப்பட்டது போல, இந்த முறையும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்துதான் முடிவெடுப்போம். எங்களுக்கென ஒரு செயல்முறை இருக்கிறது.
பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் நாடு முழுவதும் பிரசாரம் செய்த ராகுலுக்கு தனது பிரசார மேலாளராக ஒருவர் தேவைப்பட்டார். அதனால் அவர் தேர்தலை சந்திக்கவில்லை. இது பிரியங்கா, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு. இந்த தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைவது உறுதி.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.