புதுடெல்லி,
‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் சிங் மான், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் முழுமையாக எண்ணிக்கை முடியும் வரை இந்தியா கூட்டணிக் கட்சியினர் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘இந்தியா’ கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பா.ஜனதா ஆட்சி அமைப்பது சிரமம் என அரசு நிறுவனங்கள் கூட கணித்துள்ளது.
கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஆலோசனை கூட்டத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். எங்களை பிரிக்க நினைக்காதீர்கள். விதிமுறைகள் படி வாக்குகளை எண்ணக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க உள்ளோம்.”
இவ்வாறு அவர் பேசினார்.