இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் பஞ்சாபின் பரீத்கோட் தொகுதியில் சுயேச்சையாக போட்டி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைச்சுட்டுக் கொன்ற பியாந்தர் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்ஸா (45) மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். இவர், பஞ்சாபின் பரீத்கோட் தொகுதியில் சுயேச்சையாக வேட்மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி(66) தனது இரண்டு பாது காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் குடியிருப்பில் 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றது.

பஞ்சாபின் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலில் தீவிரவாதிகளை வெளியேற்ற, ‘ஆபரேஷன் புளூஸ்டார்’ எனும் இந்திய ராணுவ நடவடிக்கைக்கு பிரதமர் இந்திரா உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு பழி வாங்கும் வகையில் சீக்கியர் பாதுகாவலர்களால் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்தது. இதில், சத்வந்த் சிங் என்ற கொலையாளி, போலீஸாரால் அப்போதே சுட்டுக் கொல்லப்பட்டார். கைதான பியாந்தர் சிங் மற்றும் கொஹர் சிங் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 1989-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

இவர்களில், பியாந்தர் சிங்கின் மகனான சரப்ஜித், தற்போது பஞ்சாபில் உள்ள தனித் தொகுதியான பரீத்கோட்டில் போட்டியிடுகிறார். இவர் பிளஸ்-2 மட்டும் படித்துள்ளார். இதற்குமுன், மக்களவை தேர்தலில் சரப்ஜித் 2004, 2009-ம் ஆண்டுகளில் பதிண்டாவிலும், 2014 -ல் தனித் தொகுதியான பத்தேகர் சாஹேப்பிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனிடையே, 2007 பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பஹதூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

2014-ல் இவர் உ.பி.யின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். பிறகு அக்கட்சியிலிருந்து விலகியவர் தற்போது சுயேச்சையாக பரீத்கோட் மக்களவை தனித்தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது தந்தையை வாழ்த்தும் கோஷங்கள் சரப்ஜித் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் வரவேற்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.