கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சூறையாடினர். அதோடு இரண்டு விவிபாட் இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதி கட்டமாக 9 தொகுதிகளில் இன்று (ஜூன்.,01) வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) தொடங்கிய நிலையில், மேற்கு வங்கத்தில் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் பராசத், பாசிர்ஹாட், டயமண்ட் ஹார்பர், டம் டம், ஜெய்நகர், ஜாதவ்பூர், கொல்கத்தா தக்ஷின், கொல்கத்தா உத்தர் மற்றும் மதுராபூர் உள்ளிட்ட ஒன்பது தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில், தெற்கு 24 பர்கானஸ் பகுதியில் இவிஎம் இயந்திரங்கள் திருடப்பட்ட நிலையில், இரண்டு விவிபாட் இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மேற்கு வங்க தேர்தல் ஆணையம் தனது சமூக வலைத்தளத்தில் தகவல்களை பதிவிட்டுள்ளது.
அதில், இன்று காலை 6.40 மணியளவில் பெனிமாதவ்பூர் எஃப்.பி பள்ளிக்கு அருகில் உள்ள 19-ஜெய்நகர் (எஸ்சி) பகுதியின் செக்டார் அலுவலரின் ரிசர்வ் இவிஎம் இயந்திரம் மற்றும் அங்குள்ள பேப்பர்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஒரு இவிஎம் இயந்திரம், இரண்டு விவிபாட் கருவிகள் குளத்தில் வீசப்பட்டுள்ளது.
துறை அதிகாரிகள் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் உள்ள 6 வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு பணிகள் தடையின்றி நடந்து வருகிறது. புதிய இவிஎம் இயந்திரம் மற்றும் விவிபாட் கருவிகள் அந்தந்த வாக்குச்சாவடிக்கு வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை விமர்சித்த பாஜக தலைவர் அமித் மாளவியா, “மேற்கு வங்காளத்தில் ஜனநாயகம் எரிந்து கொண்டிருக்கிறது. ஜாதவ்பூரின் பாங்கரில் குண்டுகள் வீசப்பட்டன. மம்தா பானர்ஜியின் மருமகன் போட்டியிடும் டயமண்ட் ஹார்பர்தான் தொகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாஜகவினர் மிரட்டப்படுகின்றனர், வாக்குச் சாவடிகளில் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை. அபிஷேக் பானர்ஜியின் கையாட்களைப் போல மேற்கு வங்க காவல்துறை செயல்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.