இறுதிகட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நடைபெற்று வரும் சூழலில் காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி மற்றும் 7-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி, உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9,பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரம்:

உத்தர பிரதேசம்- 12.94%

பஞ்சாப்- 9.64%

மேற்கு வங்கம்- 12.63%

பிஹார் – 10.58%

ஒடிசா- 7.69%

இமாச்சல பிரதேசம்- 14.35%

ஜார்க்கண்ட்- 12.15%

சண்டிகர் – 11.64%

9 மணி நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் 14.35% என அதிகபட்சமாகவும் ஒடிசாவில் 7.69% வாக்குப்பதிவாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் பாஜக கூட்டணி கட்சியான அப்னா தளம்சார்பில் மத்திய அமைச்சர் அனுபிரியா,மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பரில் அபிஷேக் பானர்ஜி (திரிணமூல்), பிஹாரின் பாடலிபுத்ராவில் லாலுமகள் மிசா பார்தி (ஆர்ஜேடி), இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் மாநில அமைச்சர் விக்ரமாதித்யா (காங்கிரஸ்), பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் (பாஜக), ஹமீர்பூரில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் (பாஜக) என 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று மாலையுடன் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து, பல்வேறு ஊடகங்கள் சார்பில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும். இதன்மூலம் தேர்தல் முடிவுகள் குறித்து ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.

யோகி நம்பிக்கை: முன்னதாக, இன்று காலை கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இது இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா. இன்று உபி.,யின் 13 தொகுதிகள் உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் முன்னால் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளன. தேர்தலில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் எங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும் போது ஜூன் 4 எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாளாக தெரிகிறது. அன்றைய தினம் மீண்டும் மோடி ஆட்சி அமையும்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2.5 மாதங்களாக பரபரப்பாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் இந்தியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் இந்தியப் பிரதமராக 10 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை அவர் உயர்த்தியுள்ளார்.
பிரதமரின் தற்போதைய தியானம் தேசத்துக்கானது. ஊழல், முறையற்ற நடத்தைகளில் ஈடுபடுவோருக்கும் அதன் முக்கியத்துவம் புரியாது. அதனைப் புரிந்து கொள்ள இந்தியா மீது, இந்தியாவின் மதிப்பீடுகள் மீது நம்பிக்கை வேண்டும்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.