கோவை வனச்சரகம், மருதமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று யானை பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வனத்துறையினர் அவ்விடத்துக்கு விரைந்தனர்.
அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தன் குட்டியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெண் யானை உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்த நிலையில், குட்டி யானையும் அருகிலேயே நின்றது.
உடனடியாக மருத்துவக்குழுவினரின் உதவியோடு தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். தாய் யானை உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதால், என்ன செய்வதென்று அறியாமல் குட்டி யானை பரிதவிப்போடு அதன் அருகிலேயே நின்று பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.
யானையின் உடலில் குளுக்கோஸ் ஏற்றி, பழம், தீவனம் கொடுத்தனர். தொடர்ந்து க்ரேன் உதவியோடு யானையை நிற்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர் சிகிச்சைக்கு பலனாக தாய் யானை உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக வனத்துறையினர் கூறியுள்ளனர். பழம் மற்றும் தீவனங்களை நன்கு உட்கொள்ள தொடங்கியுள்ளது. தாய், குட்டி இரண்டு யானைகளும் நன்றாக உள்ளது.
இந்நிலையில் இன்றும் யானைக்கு சிகிச்சை அளித்து கண்காணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யானை குணமாக அந்தப் பகுதி மூதாட்டி கற்பூரம் ஏற்றி வழிபட்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.