சென்னை: தமிழகத்தில் கடும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 6-ம் தேதிக்கு பதிலாக பள்ளிகள் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என்று கல்வி துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதில், 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், ரம்ஜான் பண்டிகை மற்றும் மக்களவை தேர்தல் காரணமாக அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் தேதி மாற்றப்பட்டு ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் நடத்தப்பட்டு, அதன்பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது.
இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் முதல் நாளிலேயே வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளும் பள்ளிகள் திறப்புக்கான அறிவிப்பை வெளியிட்டன.
இந்த சூழலில், தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வந்த மழை குறைந்து, வெயில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் விஎம்எஸ் முஸ்தபா உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 9-ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைத்து வகை பள்ளிகளும் ஜூன் 10-ம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்ப அலை காரணமாக, புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூன் 12-ம்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.