காவி உடை, திருநீறு, ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி 2-வதுநாளாக நேற்று தியானத்தை தொடர்ந்தார். காவி உடை, கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் அதிகாலை 5 மணி அளவில் விவேகானந்தர் மண்டபத்தைவிட்டு வெளியே வந்த பிரதமர், இரு கைகூப்பி சூரிய உதயத்தை தரிசனம் செய்தார். இன்று மாலை வரை அவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ளவிவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் காவி உடை, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் தியான அறையில் இருந்து பிரதமர் மோடி வெளியே வந்தார்.ருத்ராட்ச மணிகளை உருட்டி, ஜெபம் செய்தபடியே விவேகானந்தர் பாறையை வலம் வந்தார். பின்னர், கிழக்கு நோக்கிகைகூப்பியபடி சூரிய உதய காட்சியைதரிசித்தார். அப்போது மேகங்கள் இல்லாததால் அதிகாலை சூரியன் செந்நிறத்தில் ரம்மியமாக காட்சியளித்தது. சூரிய ஒளியில் முக்கடல்களும் தங்கமாக ஜொலிப்பதை பிரதமர் ரசித்துப் பார்த்தார்.

மந்திரங்களை உச்சரித்தபடியே, தான் கொண்டு வந்த வெண்கலக் கெண்டியில் இருந்து கங்கை தீர்த்தத்தை சிறிது சிறிதாக கடலில் ஊற்றி, கங்கா வழிபாடு மற்றும் சூரிய உதயகால பூஜைகளை நடத்தினார்.

பின்னர், விவேகானந்தர் மண்டபம் சென்ற பிரதமர், விவேகானந்தர் சிலைமுன்பு தரையில் அமர்ந்து சுமார் அரைமணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் தியான மண்டபம் சென்று தியானத்தை தொடர்ந்தார். அப்போது, அமைதியான சூழலில் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது.

மருத்துவர்கள் பரிசோதனை: பிரதமரின் தியானம் நேற்று மாலை, இரவும் நீடித்தது. தொடர் தியானத்துக்கு இடையே தியான மண்டபத்தை ஒட்டிய அறையில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டார். இளநீர், பழச்சாறு மட்டும் அருந்தினார். திட உணவுகள் எதுவும் சாப்பிடவில்லை.

சுமார் 5 மணி நேரத்துக்கு ஒருமுறை தியானம் முடிந்து ஓய்வெடுக்க அறைக்கு வரும்போது, பிரதமரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

3 நாட்களாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் தியானத்தை பிரதமர் மோடி இன்றுமாலை 4 மணி அளவில் நிறைவு செய்கிறார். பின்னர், படகு மூலம் கன்னியாகுமரி கரை பகுதிக்கு வந்து, ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் மோடியின் தியானத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் நேற்றும் தொடர்ந்தன. கன்னியாகுமரி கடலில்3 நாட்டிக்கல் மைல் தூரம் வரை மீன்பிடிபடகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கன்னியாகுமரி பகுதியில்மட்டும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மற்ற பகுதிகளில் மீன்பிடி பணிகள் வழக்கம்போல நடைபெற்றன.

ஆதார் அட்டை இருக்கும் சுற்றுலா பயணிகள் மட்டும் நேற்று விவேகானந்தர் பாறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் தியானம் செய்யும் தியான மண்டபம் பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் தாழ்வாரம், ஸ்ரீபாத மண்டபத்துக்கு பயணிகள் வழக்கம்போல சென்று வந்தனர். பகல் 12 மணி அளவில் பாதுகாப்புக்காக சுற்றுலா படகுசேவை நிறுத்தப்பட்டு, மீண்டும் 3 மணிமுதல் அனுமதி அளிக்கப்பட்டது. முக்கடல்சங்கமம், கடற்கரை பகுதிகளுக்கும் பயணிகள் வழக்கம்போல அனுமதிக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.