நாட்டின் எதிர்கால பயணத்தில் இளம் தலைமுறையை வலுவான முறையில் ஈடுபடுத்த புதிய பொறிமுறை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இளம் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று (30) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இளையோரின் பங்கேற்புடனான நிகழ்வுகளின் ஒரு அங்கமாக “இளையோர் கலந்துரையாடல் – நாளை இலங்கையின் இளம் தலைவர்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சீர்த்திருத்த முயற்சிகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் வெற்றிகரமான எதிர்கால பயணத்திற்கு இளையோரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.
இளையோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்களை வழங்கிய ஜனாதிபதி, எதிர்கால இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான இளைஞர்களின் முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இதன்போது நாட்டின் எதிர்காலத்திற்கான முயற்சிகளுக்கான இளையோரின் யோசனைகளையும், பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை செயற்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, சர்வதேச அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் பணிக்காளர் தினுக் கொலம்பகே, இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் / பணிப்பாளர் பசிந்து குணவர்தன உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.