சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாணவர்கள் பற்றிய விவரங்களையும், வருகைப் பதிவேட்டையும் ‘எமீஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறது. மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ‘எமீஸ்’ தளத்தில் பதிவேற்றுவதிலேயே நேரம் செலவாகிறது என்றும், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நேரத்தைவிட, இதற்காக தங்களது செல்போனுடன் இருக்கும் நேரம்அதிகமாகிவிட்டதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதேபோல, காவல் துறையினரை ஆளும் கட்சி நிர்வாகிகள் மிரட்டுவதும், வருவாய்த் துறை ஊழியர்கள் மீது மணல் திருட்டு கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது.
கைத்தறித் துறை பணியாளர்கள் 150 பேர் மனித உரிமைஆணையத்தில், உயர் அதிகாரிகளால் தாங்கள் நசுக்கப்படுவதாகக் கூறியும், உரிய விசாரணை நடத்தவேண்டும் என்றும் மனு அளித்துள்ளனர். அரசுத் துறை ஊழியர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். தமிழக முதல்வரின் நிர்வாகத் திறமையின்மைக்கு இதுவே சான்றாகும்.
அனைத்து அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் ஏதேனும் ஒருவகையில் திமுக ஆட்சியில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துப் பணியாளர்கள், நியாயவிலைக் கடை ஊழியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் என்று அனைத்துத் துறை ஊழியர்களும் திமுக அரசிடம், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராடிவருகின்றனர்.
அதேநேரத்தில், அனைத்துத் துறைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிட்டு, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு அரசு ஊழியர்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. தலைமைச் செயலகத்தில், முதல்வரின் தனிப் பிரிவிலேயே 25-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.
எனவே, கைத்தறி, போக்குவரத்து ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆசிரியர் மற்றும்அரசு ஊழியர் சங்கத்தினரை அழைத்துப் பேசி, அவர்களுடைய குறைகளை உடனடியாகக் களைய வேண்டும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.