திருச்சி: திமுக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக சார்பில், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் (பூத் ஏஜென்ட்), வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.
சென்னை அறிவாலயத்திலிருந்து சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
திருச்சி அஜந்தா ஹோட்டலில் நடந்த காணொலி கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு, மத்திய மாவட்டச் திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாணிக்கம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ராமர், மாநகராட்சி மேயர் அன்பழகன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணும் மைய முகவர்களும் கலந்து கொண்டனர்.