பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா வின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். அங்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக் கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றைய தினம் இரவே பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பியோடினார். இதையடுத்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அவரது வீடுமற்றும் அலுவலகத்தில் சோதனைசெய்து கணினி, மடிக் கணினியை பறிமுதல் செய்தனர்.
பிரஜ்வலின் ஆபாச வீடியோக் களை சேகரித்து ஆய்வு செய்தனர்.அதில் பெரும்பாலான வீடியோக்களில் அவரது முகம் இடம்பெறாததால், அதில் இடம்பெற்றுள்ள உடலின் அங்கங்கள் அடங்கிய பதிவுகளை சேகரித்தனர்.மேலும் அந்தவீடியோக்களில் பதிவாகியுள்ள குரல் ஆகிய பதிவுகளையும் சேகரித்து சோதனைக்கு அனுப்பினர்.
ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும், சிபிஐ அதிகாரிகள் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் விடுத்தனர். சர்வதேச போலீஸாரின் உதவியை கோரிய போதும் பிரஜ்வலை கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், 35 நாட்களுக்கு பின்னர் பிரஜ்வல் வியாழக்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்குஜெர்மனியில் இருந்து லுஃப்தான்ஸாவிமானம் மூலம் பெங்களூரு திரும்பினார். அவரை விமான நிலையத்தில்சிறப்பு புலனாய்வு பிரிவின் பெண் அதிகாரிகள் குழு கைது செய்தது.
இதையடுத்து, போலீஸார் அவரை பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அதற்கு பிரஜ்வல் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ஜூன் 6-ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறுகையில், ‘‘பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளித்தால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கறிஞர் அருண் கூறுகையில், ‘‘எங்களது தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். பிரஜ்வல் இந்த வழக்கில் இருந்து வெளியே வருவார். அவரை பற்றிஎதிர்மறையான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.