போபால்: “பிரதமர் மோடி சட்டத்தால் ஆளப்படவில்லையா அல்லது அவர் விதிகளுக்கு கட்டுப்படாதவரா?” என்று பிரதமரின் தியான மண்டப புகைப்படங்கள் குறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். புகைப்படம் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவிட தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்த பிரதமர் மோடி அதுகுறித்த புகைப்படங்கள் வெளியிட்டிருப்பது குறித்து அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
கபில் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘புகைப்படம் எடுக்கத் தடைவிதிக்கப்பட்ட விவேகானந்தர் தியான மண்டபத்தின் புகைப்படங்களை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இது தண்டனைக்குரிய குற்றம்’ என்று சுட்டிக்காட்டியிருக்கும் பதிவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் தலைவர் திக்விஜய் சிங் பதில் அளித்து பதிவிட்டுள்ளார். அதில், “இதனைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. நரேந்திர மோடி சட்டத்தால் ஆளப்படவில்லையா அல்லது சட்டங்களும் விதிகளும் அவருக்கு பொருந்தாதா? பிரதமர் அலுவலகம் பதில் சொல்லுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, கபில் என்ற எக்ஸ் பயனர் தனது பதிவில், “விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான அறையை நீங்கள் பார்ப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். ஏனென்றால், தியான அறையின் உள்ளே புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு புகைப்படம் எடுப்பது தண்டனைக்குரியது. ஆனால், கேமரா இல்லாமல் கேமரா – ஜீவி என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தியான மண்டபத்தில் புகைப்படம் எடுப்பது குறித்த விதிகளின் ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.
விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம்: பிரதமர் மோடி தேர்தல் முடிவுகள் வெளியாகவதற்கு முன்பாக தியானம் மேற்கொள்வதற்காக தமிழகத்தின் கடற்கரை நகராமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு வியாழக்கிழமை (மே 30) மாலை வந்தடைந்தார். அங்கு அவர் மேற்கொண்ட 45 மணி நேர தியானம் சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மிக பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்ததும் கேதர்நாத் சென்றார். 2014-ம் ஆண்டு பிரச்சாரம் நிறைவடைந்ததும் சிவாஜியின் பிரதாப்கர் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you @KapilSibal for pointing it out. Is @narendramodi not governed by law and rules or rules don’t apply to him. Would @PMOIndia please respond? @INCIndia @Jairam_Ramesh @RahulGandhi https://t.co/O0GBPKc1jU
— Digvijaya Singh (@digvijaya_28) June 1, 2024